இனி நாடாளுமன்றத்தில் எந்த தடையுமில்லை…! அசுர பலம் பெற்றது பா.ஜனதா கூட்டணி…!

Read Time:3 Minute, 46 Second

இனி நாடாளுமன்றத்தில் எந்தஒரு தடையும் இல்லாமல் மசோதாக்களை தாக்கல் செய்து வெற்றிப்பெறும் அளவிற்கு பெரும்பான்மையை மாநிலங்களவையில் பாஜனதா கூட்டணி பெற்றிருக்கிறது.

இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். 2014, 2019 தேர்தல்களில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மையை பெற்று ஆட்சியில் அமர்ந்ததால் மக்களவையில் பெரும்பான்மையை பெற்றிருந்தது. ஆனால், மாநில எம்.எல்.ஏ.க்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் மாநிலங்களவையில் அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடையாது.

இத்தனை ஆண்டுகளாக எதிர்க்கட்சிகளின் ஆதிக்கம் அதிகம்தான் இங்கு இருந்துவந்தது. இனி மாநிலங்களவையில் பாஜனதா கூட்டணியின் அதிகாரமே மேலோங்கியிருக்கும் என்ற நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் பெரிய கட்சியாக பார்க்கப்படும் கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சியின் பலம் 38 ஆக மாநிலங்களவையில் குறைந்துள்ளது.

242 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் எந்த மசோதாவையும் நிறைவேற்றுவதற்கு 121 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும்.

இப்போது உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்து 10 எம்.பி.க்கள் பாஜனத சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து அக்கட்சியின் பலம் மட்டுமே 92 ஆக அதிகரித்துள்ளது.

இதுபோக பாஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் ராம்தாஸ் அத்வாலேவின் இந்திய குடியரசு கட்சி, அசாம் கன பரிசத், மிசோ தேசிய முன்னணி, தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, பாட்டாளி மக்கள் கட்சி, போடோலாந்து மக்கள் முன்னணி ஆகியவற்றிடம் தலா ஒரு இடம் உள்ளது. இதனால் பாஜனதா கூட்டணி பலம் 104 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நியமன உறுப்பினர்கள் 4 பேர் ஆதரவு அளிப்பதால் பாஜனதா கூட்டணிக்கு ஆதரவு எம்.பி.க்கள் எண்ணிக்கை 108 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேலும் பா.ஜனதா கூட்டணியில் சேராமல், அக்கட்சியுடன் நட்பு பாராட்டும் கட்சிகளும் ஆதரவை வழங்கி வருகின்றன. இவ்வரிசையில் இடம்பெறும் கட்சிகளான அஇஅதிமுக (9 எம்.பி.க்கள்), பிஜூ ஜனதா தளம் ( 9 எம்பிக்கள்), தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (7 எம்.பி.க்கள்), ஒய்எஸ்ஆர்பி கட்சி (6 எம்.பி.க்கள்) ஆதரவு அளிக்கும் போது மாநிலங்களவையில் பாஜனதாவின் பலம் 139 ஆக அசுரபலமாகிறது. இதனால் இனி நிலுவையில் இருக்கும் அனைத்து மசோதாக்களையும் மத்திய பாஜனதா அரசு விரைவாக நிறைவேற்றிட முடியும்.

மாநிலங்களவைக்காக நடந்து வரும் தேர்தலில் சீராக எதிர்க்கட்சிகள் தங்கள் பிடியை இழந்து வருகின்றன. தற்போது 38 எம்.பி.க்களை காங்கிரஸ் கொண்டிருந்தாலும், ஒரு மசோதாவை எதிர்க்கவோ அல்லது தேர்வுக்குழுவுக்கு அனுப்ப கோரி போராடினாலோ அந்த முயற்சி தோல்வியில் முடியவே அதிகமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.