சிபிஐ பொது அனுமதி என்றால் என்ன…? எத்தனை மாநிலங்கள் அதனை திரும்ப பெற்றுள்ளன…?

Read Time:8 Minute, 43 Second

மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணைக்கான பொது அனுமதியை வாபஸ் பெற்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பட்டியலில் தற்போது ஜார்கண்ட் இணைந்திருக்கிறது. மேற்கு வங்காளம், ராஜஸ்தான், மராட்டியம் மற்றும் கேரளா போன்ற பல மாநிலங்களும் இதற்கு முன்தாக இதுபோன்று தங்களுடைய பொது அனுமதியை வாபஸ் பெற்றுள்ளன.

ஜார்க்கண்ட் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிபிஐக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள், 1996 பிப்ரவரி 19-ல் முந்தைய பீகார் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் தனி மாநிலமாக 1999-ல் உருவானது. அங்கு காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) கூட்டணியுடன் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் (ஜே.எம்.எம்) ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது.

சிபிஐ பொது அனுமதியென்றால் என்ன…? எத்தனை மாநிலங்கள் அதை திரும்பப் பெற்றுள்ளன…? இந்த கேள்விகள் அனைத்துக்கும் பதிலை பார்க்கலாம்…

பொது அனுமதி என்றால் என்ன?

சிபிஐ டெல்லி சிறப்பு போலீஸ் ஸ்தாபன சட்டத்தால் (டிபிஎஸ்இஏ) நிர்வகிக்கப்படுகிறது. இதனால் சிபிஐ டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவாக அமைகிறது. மேலும் சிபிஐயின் அதிகார வரம்பு டெல்லிக்கு மட்டுமே என்றாகிறது. சமீபத்தில் கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவில், மேற்கு வங்காளத்தில் ஊழலில் ஈடுபடும் மத்திய அரசு ஊழியர்களை மாநில அரசின் குறிப்பிட்ட அனுமதியின்றி விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டது.

எனவே மற்ற விஷயங்களுக்கு சிபிஐக்கு மாநில அரசாங்கத்தின் அனுமதி தேவையாகும்… மேற்கு வங்காள மாநில அதிகார வரம்பில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். சிபிஐ மற்ற மத்திய அரசு நிறுவனங்களை போல் செயல்பட முடியாது. எடுத்துக்காட்டாக, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இந்த அமைப்பு சட்டப்படி அகில இந்திய அளவில் அதிகார வரம்பைப் பெறுகிறது.

சிபிஐ சட்டம் என்ன சொல்கிறது?

ஒரு மாநில அரசின் பரிந்துரையின் பேரில், மாநிலத்தின் அதிகார எல்லைக்குள் ஒரு வழக்கை விசாரிக்க சிபிஐக்கு மத்திய அரசு உத்தரவிடலாம். அதாவது ஒரு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கவேண்டும். Delhi Special Police Establishment Act டிபிஎஸ்இ சட்டத்தின் பிரிவு – 6 மத்திய அரசுக்கு இதற்கான அதிகாரத்தை அளிக்கிறது. நீதிமன்றங்கள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடலாம், மேலும் விசாரணையின் முன்னேற்றத்தை கண்காணிக்கவும் முடியும்.

மாநில அரசின் பரிந்துரையின் பெயரில்தான் மத்திய அரசு ஒரு வழக்கு தொடர்பாக விசாரிக்க கேட்டுக்கொள்ள முடியும் என சிபிஐ விதிமுறையும் கூறுகிறது. இருப்பினும், மாநிலங்களில் அனுமதியின்றி எந்தஒரு மாநிலத்திலும் விசாரணையை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள்உத்தரவிடலாம்.

சிபிஐக்கு எத்தனை வகையான அனுமதி உள்ளது…?

சிபிஐ விசாரணைக்கு இரண்டு வகையான அனுமதி உள்ளது. பொதுவான மற்றும் குறிப்பிட்ட என்பவையாகும் .

ஒரு வழக்கை விசாரிக்க மாநில அரசு சிபிஐக்கு ஒரு பொது அனுமதியை அளிக்கும்போதும், விசாரணை தொடர்பாக அல்லது ஒவ்வொரு வழக்கிற்கும் அந்த மாநிலத்திற்குள் நுழையும் ஒவ்வொரு முறையும் விசாரணை முகமை புதிய அனுமதியைப் பெற தேவையில்லை.

மாநில அரசால் பொது அனுமதி திரும்பப் பெறப்படும்போது, சம்பந்தப்பட்ட மாநில அரசிடமிருந்து ஒவ்வொரு விசாரணைக்கும் அனுமதியை பெற வேண்டும். இவ்வாறு குறிப்பிட்ட அனுமதியை மாநில வழங்காவிட்டால் சிபிஐ அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட மாநிலத்திற்குள் நுழையும்போது காவல்துறை அதிகாரிகளின் அதிகாரம் இருக்காது. இது சிபிஐயின் தடையற்ற விசாரணைக்கு தடையாக உள்ளது. ஊழல் அல்லது வன்முறை வழக்கில் அந்த தடையற்ற விசாரணையை எளிதாக்க ஒரு பொது அனுமதி வழங்கப்படுகிறது.

ஒரு மாநிலத்தில் சிபிஐ எந்த வகையான வழக்குகளை விசாரிக்கிறது?

சிபிஐ மூன்று வகையான வழக்குகளை விசாரிக்கிறது. அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரிக்கும் ஊழல் தடுப்பு பிரிவாகும். பொருளாதார குற்ற பிரிவு, நிதி மோசடி, வங்கி மோசடி, பணமோசடி, கறுப்புப் பண நடவடிக்கைகள் போன்ற குற்றங்களை ஆராய்கிறது. இருப்பினும் சிபிஐ வழக்கமாக பணமோசடி வழக்குகளை அமலாக்க இயக்குநரகத்திற்கு (ED) மாற்றுகிறது. கொலை போன்ற வன்முறை வழக்குகள், உளவு, போதைப்பொருள், தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மோசடி போன்ற உள் பாதுகாப்பு தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும் விசாரிக்கிறது. சிபிஐயின் இந்த வகையான விசாரணைகள்தான் அதிகமாக ஊடகங்களில் கவனம் பெறுகிறது. எடுத்துக்காட்டாக, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு….

எந்த மாநிலங்கள் பொது அனுமதியை வாபஸ் பெற்றுள்ளன?

தற்போது இந்த பட்டியலில் குறைந்தது ஏழு மாநிலங்கள் உள்ளன, அவை சிபிஐக்கு பொது அனுமதியை வாபஸ் பெற்று உள்ளன. அவை மிசோரம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கேரளா மற்றும் ஜார்க்கண்ட் ஆகும். இந்த மாநிலங்களில் மிசோரம் தவிர மற்றவை எதிர்க்கட்சிகளால் ஆளப்படுகின்றன. மிசோரத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணி (எம்.என்.எஃப்) பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு பகுதியா இருந்தாலும்… எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகியவை காங்கிரஸை அரசாங்கத்தின் ஒரு பகுதியாக கொண்டுள்ளன. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரசுக்கு சொந்த பெரும்பான்மை அரசாங்கம் உள்ளன.

ஜூலை 2019-ல், சிபிஐ விசாரணைக்கு திருபுராவில் பொது அனுமதி இல்லை என்று கூறப்பட்டது. ஆனால், மாநிலத்தில் பல சோதனையை சிபிஐ மேற்கொண்டது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பாஜனதா ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் ஆளும் மாநிலமான பஞ்சாப், சிபிஐக்கு பொது அனுமதியை திரும்பப் பெறவில்லை. ஆனால் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில், சமயம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கப்படுவதற்கான குறிப்பிட்ட ஒப்புதலை திரும்பப் பெற்றது. இந்த வழக்குகளை ஷிரோமணி அகாலிதளம்-பாஜக அரசு 2015-ல் சிபிஐக்கு ஒப்படைத்திருந்தது. ஆட்சிக்கு வந்த பின்னர், கேப்டன் அமரீந்தர் சிங் அரசாங்கம் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்று, அவற்றை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) அமைத்தது.

ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகியவை பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களாகும். இந்த ஆளும் கட்சிகள் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலும் கிடையாது. இங்கு சிபிஐக்கு பொது அனுமதியுள்ளது. டெல்லி, புதுச்சேரியிலும் உள்ளது.