வெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…?

Read Time:7 Minute, 2 Second

கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு புதிய மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலகின் பல்வேறு மருந்து நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம் கடந்த ஜனவரியில் ‘எம்ஆர்என்ஏ-1273’ என்ற மருந்தை கண்டுபிடித்தது. இந்த மருந்து முதலில் விலங்குகளுக்கு அளித்து பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் முழு வெற்றி கிடைத்ததை அடுத்து மனிதர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

மனித பரிசோதனையில் மருந்து 94 சதவீதம் பயனளிப்பதாக மாடர்னா நிறுவனம் அறிவித்து உள்ளது.

இதேபோன்று அமெரிக்காவின் ப்ஃபிசர் மற்றும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனம் இணைந்து உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து, செலுத்தப்பட்டவர்களில் கிட்டதட்ட 90 சதவீத பேருக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனமும் தடுப்பூசி மருந்து சோதனையில் முன்னிலையில் இருக்கிறது.

ஐதராபாத்தை தளமாக கொண்ட பாரத் பயோடெக் தனது கோவாக்சின் கொரோனா வைரஸ் தடுப்பூசி வேட்பாளருக்கான கடைசி கட்ட சோதனைகளை தொடங்குவதாக கூறியுள்ளது. இந்த சோதனையில் 26,000 பேர் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று நோயை ஒரு முடிவுக்கு கொண்டு வரக்கூடிய தடுப்பூசியை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் ப்ஃபிசர் மற்றும் மாடர்னா நிறுவனத்தின் மருந்துகள் எம்.ஆர்.என்.ஏ. அடிப்படையிலானது. இது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட மனித சோதனைகளே தவிர, உண்மையான உலகில் ஒருபோதும் சோதிக்கப்படவில்லை.

எம்.ஆர்.என்.ஏ. மருந்து செயல்பாடு தொடர்பாக முழுமையாக படிக்க… கொரோனா வைரசுக்கு எதிராக ஆர்.என்.ஏ. அடிப்படையிலான தடுப்பூசி…?

எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியில் ஒரு வைரசின் ஆன்டிஜெனின் மரபணு குறியீடு நகலெடுக்கப்படுகிறது. அதனுடைய ஆர்.என்.ஏ. உடலில் செலுத்தப்படுகிறது. உடலில் சென்றதும் தேர்ந்தெடுக்கப்பட்ட செல்களை ஆன்டிஜெனை உருவாக்குமாறு ஆர்.என்.ஏ. அறிவுறுத்துகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை எச்சரித்து, புதிய நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க தூண்டுகிறது. இது மனித உடலில் உள்ளிருக்கும் வைரசை அழிக்க உதவும்.

இந்தியாவுக்கான சவால்கள்

ப்ஃபிசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகளின் ஆரம்பக்கட்ட வெற்றி பற்றிய செய்திகள் உலகிற்கு உற்சாகத்தை அளித்தாலும், இந்த அதிநவீன தடுப்பூசிகளை சேமித்து கொண்டு செல்வதற்கான போக்குவரத்து திறன் இந்தியாவுக்கு உள்ளதா…? என்ற கவலைகள் வெகுவாக எழுகிறது.

இந்த எம்ஆர்என்ஏ தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு மற்றும் போக்குவரத்துக்கு மிகவும் குளிரான சூழல் தேவையாகும். இது இந்தியாவில் எளிதில் சாத்தியமில்லை என்பதே வல்லுநர்கள் கவலையாக உள்ளது. கடந்த வாரம் ப்ஃபிசர் நிறுவனம் தன்னுடைய மருந்து பயனளிப்பதாக கூறிய போது இந்தியாவின் எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா பேசுகையில்,

“ப்ஃபிசர் தடுப்பூசி மருந்தை-70 டிகிரி செல்சியஸில் வைக்கப்பட வேண்டும், இது இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு ஒரு சவாலாக உள்ளது, அங்கு குளிர் சங்கிலியை பராமரிப்பதில் சிரமங்கள் இருக்கும், குறிப்பாக கிராமப்புறங்களில். ஒட்டுமொத்தமாக, தடுப்பூசி ஆராய்ச்சியில் செய்திகள் மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு ஊக்குவிக்கிறது என்று கூறியிருந்தார்.

குளிர்ச் சங்கிலியின் அவசியம்!

தடுப்பூசி தயாரிக்கும் இடம் தொடங்கி பயனாளிக்குப் பயன்படும் காலம் வரையில் தடுப்பூசிகளை சரியான வெப்பநிலையில் பாதுகாக்கும் வழிமுறைக்குதான் ‘குளிர்ச் சங்கிலி’ (Cold Chain) என்று பெயராகும். தடுப்பூசிகள் முறையாக செயல்பட, இருப்பு வைத்தல், போக்குவரத்து, மருத்துவக் கட்டமைப்பு உள்ளிட்ட இந்த சங்கிலியின் அங்கங்கள் சரியாக அமைய வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் இது மிகப்பெரிய சவாலாகும்.

இப்போதுள்ள குளிர்ப்பதன சேமிப்பு அறைகளும் (Walk-in cold rooms), சேமிப்பு மையங்களும் ஏற்கெனவே வழக்கத்தில் உள்ள தடுப்பூசிகளைப் பாதுகாக்கும் படியாக 2 லிருந்து 8 டிகிரி செல்சியஸ் வரையுள்ள வெப்பநிலைக்கு ஏற்றவையாகும். இப்போது புதிய தடுப்பூசிகள் சிலவற்றுக்கு, மைனஸ் 70லிருந்து மைனஸ் 80 செல்சியஸ் வரை வெப்பநிலை தேவைப்படுவதாக தெரிகிறது. இதற்குத் தகுந்தாற்போல் குளிர்ச் சங்கிலியை மாற்ற வேண்டிய அவசியம் மிகவும் முக்கியமானது. மிகவும் குறுகிய காலத்தில் இந்த ஏற்பாட்டை மேற்கொள்வது பெரும் கேள்விக்குரியது.

தடுப்பூசி கைக்கு வருவதற்கு முன்னால் இதற்கான கட்டமைப்பு வசதிகளைக் கூட்ட வேண்டிய நிர்ப்பந்தம் மருந்து நிறுவனங்களுக்கு ஏற்பட்டு உள்ளது. விமானங்களில் மருந்துகள் வருவது முதல் பயனாளரை அடையும் வரையில் பல்வேறு வகையான சவால்கள் நிறைந்து காணப்படுகிறது.. ஆழ்உறைப் பேழைகளையும் (Deep freezer), குளிர்ப் பெட்டிகளையும் (Cold Box) அதிகப்படுத்த வேண்டியது இருக்கும். வாங்குவது மட்டுமின்றி போர்க்கால நடவடிக்கையால் செயல்படுத்தினால் மட்டுமே தடுப்பூசியின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும் என்ற நிலையும் எதிராக நிற்கிறது.