ஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…?

Read Time:5 Minute, 39 Second

“பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கி இருக்கும் தடுப்பூசி மருந்து 70.4 சதவீதம் கொரோனாவுக்கு எதிராக தடுப்பாற்றல் கொண்டதாக பரிசோதனை முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த மருந்தில் சிறிய மாற்றங்களை செய்து முழுமைப்படுத்தும் போது இதன் தடுப்பாற்றலை 90 சதவீதம் வரையில் அதிகரிக்க முடியும் என்றும் பரிசோதனை குழு தெரிவித்து இருக்கிறது.

இந்த மருந்து குறித்தான 3-ம் கட்ட பரிசோதனையில் தரவுகளை ஆய்வு செய்து இடைக்கால முடிவுகளில் இது தெரியவந்து உள்ளது. இருப்பினும், 2 வெவ்வேறு அளவுகளில் தடுப்பூசி மருந்து செலுத்தி பரிசோதிக்கப்பட்ட போது ஒன்றில் 90 சதவீதமாகவும், மற்றொன்றில் 62 சதவீதமாகவும் தடுப்பூசியின் செயல்திறன் இருந்ததாக பரிசோதனை குழு தெரிவித்து இருக்கிறது. இந்த வித்தியாசம் குறித்து பின்னர் ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதியவர்கள் உட்பட அனைத்து வயதினருக்கும் இந்த தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. அழஈ1222 என்ற குறியீட்டு பெயர் கொண்ட தடுப்பூசி மருந்து மற்ற மருந்துகளைவிடவும் விலை மலிவானது மற்றும் சேமித்து வைப்பதும் எளிதானதும் ஆகும்.

அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் மாடர்னா ஆகிய நிறுவனங்களின் வைரஸ் தடுப்பு மருந்துகள் நோயாளிக்கு 95% பாதுகாப்பை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் குளிரூட்டல் மற்றும் போக்குவரத்து போன்ற இன்னல்கள் எழும் என தெரிவிக்கப்படுகிறது. ஆஎன்ஏ அடிப்படையிலான இந்த மருந்துகளை மைனஸ் 70 டிகிரி வரையில் குளிருடன் வைத்திருக்க வேண்டும். இந்த கட்டமைப்பு இந்தியாவில் எங்கும் கிடையாது. மேலும், விலையும் இந்த மருந்துகளுக்கு ஒரு டோசுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரையில் செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

ஆனால் இதுவே ஆக்ஸ்போர்டு மருந்தில் இப்பிரச்சினைகள் கிடையாது. இந்த மருந்தை குளிரூட்டி சாதன வெப்பநிலையில் கூட வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்த மருந்தை, உலகின் எந்த பகுதிக்கும் விநியோகிக்கலாம். பைசர், மற்றும் மாடர்னா மருந்துகள் போல அதிக குளிர்ச்சியான இடங்களில் சேமித்து வைக்க வேண்டிய அவசியமில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரையில் மற்றொரு நற்செய்தி என்னவென்றால், உலக அளவில் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அவர்கள் ஏற்கனவே ஒரு மாதத்திற்கு 40-50 மில்லியன் தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றனர். இந்தியாவில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கான கட்டம் 3 சோதனைகள் ஆட்சேர்ப்பு முடிந்ததும் தொடங்கப்பட உள்ளன.

இந்தியாவில் 3-ம் கட்ட சோதனைக்கு 1600 பங்கேற்பாளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். சோதனை முடிந்ததும், தரவுகளை ஆராய்ந்து ஆய்வு செய்தவுடன், அவசரகால பயன்பாட்டிற்கு பச்சை கொடி காட்டப்படலாம். சில தகவல்கள் சீரம் அடுத்த மாதம் விரைவில் அவசரகால பயன்பாட்டிற்கு விண்ணப்பிக்கும் என்று தெரிவிக்கின்றன. தனியார் பயன்பாட்டிற்கு இந்த தடுப்பூசியின் விலையானது ரூ .500-600 ஆக இருக்கும் என்றும் அரசு இதனை ரூ. 250-300-ல் பெற வாய்ப்பு உள்ளது என்றும் பார்க்கப்படுகிறது.

“இந்த கண்டுபிடிப்புகள் பல உயிர்களை காப்பாற்றும் ஒரு சிறந்த தடுப்பூசி நம்மிடம் இருப்பதை காட்டுகின்றன. வீரியமான மருந்து அளவுகளில் ஒன்று 90 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்பதை கண்டறிந்துள்ளோம். இந்த அளவை பயன்படுத்தினால், திட்டமிட்டபடி தடுப்பூசி விநியோகம் செய்வதுடன் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடலாம் என்று ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மருந்து தயாரிப்பு குழுவின் இயக்குநரும், தடுப்பூசி பரிசோதனை குழுவின் தலைமை ஆய்வாளருமான ஆண்ட்ரு பொலார்டு கூறியிருக்கிறார்.

சரியான அளவிலான தடுப்பூசி 90 சதவீத தடுப்பாற்றல் கொண்டதாக இருக்கும் என்பதைக் காட்டும் புள்ளிவிவரங்கள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன. திட்டமிட்டபடி பணிகள் நடைபெற்றால் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெருமளவில் தடுப்பூசிகளை விநியோகிக்க தொடங்கலாம் எனக் கூறப்படுகிறது.