வங்க கடலில் கடந்த 21-ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிதான், தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கடந்த 25-ம் தேதி நள்ளிரவு கரையை கடந்தது. இந்த புயல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக நல்ல மழையை கொடுத்து சென்றது. அதிலும் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் 31 செ.மீ. மழை பதிவானது.
இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை ஞாயிற்றுக்கிழமை உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.
தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை மறுதினம் 30-ம் தேதி மேற்கு திசையில் தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக வருகிற 1, 2 மற்றும் 3-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதிலும் தென் தமிழகத்தில் அதிகமாகவும், வட தமிழகத்தில் ஓரளவுக்கும் மழை இருக்கும் என்று தற்போதைய நிலவரப்படி கணிக்கப்பட்டு இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
தாழ்வு மண்டலத்தில் இருந்து அடுத்த நிலையான புயலுக்கு செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. அதுபற்றி வரக்கூடிய நாட்களில் கணிக்கப்பட்டு தெரிவிக்கப்படும் என தெரிவித்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 34 செ.மீ. மழை பதிவாக வேண்டும். ஆனால் 29 செ.மீ. மழைப்பொழிவுதான் தமிழகத்தில் இதுவரை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 15 சதவீதம் குறைவு ஆகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தை புயல் தாக்கலாம் என ஏதோ பரபரப்பை ஏற்படுத்தும் செய்திகள்தான் அனைத்து ஊடகங்களையும் ஆக்கிரமித்து உள்ளது. இது, மக்களை எச்சரிக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வெளியிடப்படும் செய்தியாக தெரியவில்லை. மாறாக, மக்களை பயமுறுத்தும் செயலாகவே உள்ளது. மழை பெய்தால் நீர் நிலைகளில் வெள்ளம் ஏற்படுவது இயல்பானது. அதில் பாதி தண்ணீரில் இறங்கிக்கொண்டு இங்கே பாருங்கள்.. அங்கே பாருங்கள் வெள்ளம் என்ற அலறல் செய்தியை பார்க்கும் போது கோபத்தைத்தான் ஏற்படுத்துகிறது… அடுத்த தலைமுறைக்கு இயல்பான ஒரு சம்பவம் இயற்கைப் பேரிடர் என்ற சாயலிலே எடுத்துச் செல்லப்படுகிறது என்பதுதான் வேதனைக்குரியது. சரி… இப்போதைக்கு நம்முடைய விஷயத்திற்கு வருவோம்…
தமிழகத்தை நோக்கி வங்க கடலில் இரு காற்றழுத்த தாழ்வுநிலை நகர்கிறது என்பதை பிபிசி வானிலை செயற்கைக்கோள் காட்டுகிறது. இதனால், தென் தமிழகத்தில் அதிகமான மழையும், வட தமிழகத்தில் வழக்கமான மழையும் இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், இவை புயலாக மாறுமா என்பது அடுத்தக்கட்ட நகர்வுகளை துல்லியமாக ஆய்வு செய்து வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும்…
தமிழகத்தை பொறுத்தவரையில் ஏற்கனவே நிவர் புயல் தாக்கிவிட்டது. இனியும் ஒரு புயல் தாக்குமா? என்றால் ஆம் என்று சொல்லிவிடலாம். ஆனால், ஏற்கனவே தாக்கிய பகுதியை தாக்க வாய்ப்பு உள்ளதா என்றால் குறைவு என்பதுதான் பதிலாகும். அதற்கும் காரணம் உள்ளது. ஏனென்றால் கடலில் இருக்கும் வெப்ப நிலைதான் புயல் உருவாகத்திற்கு காரணமாகும். இப்போது நிவர் புயல் உருவாகி கடந்த பகுதியில் கடலின் மேற்பரப்பில் வெப்பம் தணிந்து இருக்கும். இதனால்தான் தற்போது குளிர்ந்த காற்று சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் வீசுகிறது. எனவே “தற்போது உருவாகியுள்ள தாழ்வு நிலையானது இப்பகுதியில் நகர வாய்ப்பு குறைவு”.

தற்போது அது நிலைக்கொண்டிருக்கும் பகுதியை வைத்து பார்க்கலையில் இலங்கை வழியாக தமிழகத்தை நோக்கி தாழ்வுநிலை (தாழ்வு மண்டலமாக வாய்ப்பு உள்ளது) நகரும் போது அதிகமான மழைப்பொழிவு இருக்கும். முதல் தாழ்வுநிலை தமிழகம் தாண்டி அரபிக்கடலை செல்லும் போது, பின்னால் மற்றொரு தாழ்வு நிலை வந்தால் (அதாவது வங்க கடலிலும், அரபிக் கடலிலும் தாழ்வுநிலை நிற்கிறது) தொடர் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வழக்கமாகவே வடகிழக்கு பருமழை காலங்களில் தமிழகத்தில் இவ்வாறு தாழ்வுநிலையால் மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்புபடி மிகைப்படுத்திய செய்திகளை அதிகம் பார்க்காமல் வானிலை பற்றிய தகவல் அறிந்துக்கொண்டு நம்முடைய பணியை செய்வோம்…
இயற்கையும் தமிழகத்திற்கான இயல்பான மழையை வழங்கி விவசாயம் செழிக்கச் செய்து இன்புறச்செய்யும்… ஒருவேளை புயலாக மாறுமாயினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பாதுகாப்புடன் இருப்போம்…