தென் இந்தியாவிற்கான நுழைவு வாயிலை கைப்பற்றுமா…? பாஜக

Read Time:4 Minute, 10 Second

இந்தியாவில் ஒரு மாநிலத்தில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலை போன்று கவனம் பெற்றுள்ளது ஐதராபாத் மாநகராட்சி தேர்தல்…

இதற்கு முழு காரணமாக பார்க்கப்படுவது பாஜக தேசிய தலைவர்கள் முகாமிட்டு பிரசாரம் செய்ததுதான். ஒரு மாநகராட்சிக்கு நடைபெறும் தேர்தலுக்கு இவ்வளவு முக்கியத்துவமா… என ஆச்சர்யம் அடையும் வகையில் பாஜகவின் பிரசாரம் இருந்தது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சி தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, பிரகாஷ் ஜவடேகர், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மராட்டிய மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பெங்களூர் தெற்கு தொகுதி எம்.பி. தேஜஸ்வி சூர்யா என பாஜக தேர்தல் பிரசார தலைவர்களின் பட்டியல் நீண்டது.

பஜகவின் இந்த ஆக்ரோஷமான பிரசாரம் முதல்வராக இருக்கும் டிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்திர சேகர ராவே களத்திற்கு வரச் செய்தது. இதுவரையில் உள்ளாட்சி தேர்தல்களில் பிரசாரம் செய்யாத சந்திர சேகர ராவ், தாமாகே இறங்கிவந்து பிரசாரம் செய்ய தொடங்கினார். 150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சி இப்போது டிஆர்எஸ் வசமே உள்ளது. இப்போதைய தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆளும் டிஆர்எஸ் மற்றும் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் என நான்கு முனைப்போட்டி நிலவுகிறது.

தெலுங்கானாவில் சமீபத்தில் நடைபெற்ற துபாக்கா சட்டப்பேரவை இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியான டி.ஆர்.எஸ் கட்சியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தலில் ஆளும் கட்சியை வெல்வது அவ்வளவு சுலபமானது கிடையாது. அதுவும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி பிராந்திய கட்சி ஆதிக்கம் செலுத்தும் மாநிலத்தில் சாத்தியம் எளிதானது கிடையாது. இருப்பினும் வெற்றியை கைப்பற்றியது பாஜகவை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளது.

தென்மாநிலங்களை பொறுத்தவரையில் கர்நாடகம் தவிர்த்து பிற மாநிலங்கள் பாஜகவுக்கு இடமளிக்கவில்லை. பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி என்றால் மட்டும்தான் சில எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்களோ, எம்.பி.க்களோ கிடைப்பார்கள். ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட போது ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் அங்கு காணாமல் போய்விட்டது. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி நடைபெற்று வருகிறது. அவருக்கு போட்டியாக சந்திரபாபு நாயுடு நிற்கிறார். ஆனால் தெலுங்கானாவை பொறுத்தவரையில் காங்கிரஸ் டிஆர்எஸ் கட்சிக்கு எதிராக ஒரு பொருட்டே கிடையாது என்றாகிவிட்டது.

இந்நிலையில் தெலுங்கானாவை தென்னிந்தியாவிற்கான நுழைவு வாயிலாக பாஜக பார்க்கிறது. இதுதான் வசப்படும் மாநிலம் என அக்கட்சியின் தலைவர்கள் கூறுவதையும் பார்க்கலாம். இதைக் கருத்தில் கொண்டுதான் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்குடன் பாஜக களமிறங்கி செயல்படுகிறது. நாளை நடைபெற இருக்கும் ஐதராபாத் தேர்தலில் கடுமையான போட்டி பாஜக – டிஆர்எஸ் இடையே இருக்கும். இதில் வெற்றியென்பது பாஜகவுக்கு வசமாகுமா என்பதை உறுதியாக கணிக்க முடியாது… ஆனால் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பலமாக ஒரு அஸ்திவாரமாக அமையும் என்பதில் ஐயமில்லை….