‘தேசிய கடற்படை தினம்’ டிசம்பர் 4-ம் தேதி கொண்டாடப்படுவது ஏன்…?

Read Time:3 Minute, 10 Second

தீபகற்ப நாடான இந்தியா 7,516.6 கி.மீட்டர் நீளமுள்ள கடல்பகுதியை எல்லையாக கொண்டிருக்கிறது.

எதிரிகளிடம் இருந்து நாட்டை காப்பது மட்டுமின்றி, எதிரி நாடுகளுக்கு வலுவான பதிலடியை கொடுக்கும் வல்லமையுடன் இந்திய கடற்படை இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவின் வலுவான படைகளில் ஒன்றான இந்திய கடற்படையை கவுரவிக்கும்விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ம் தேதி ‘தேசிய கடற்படை தினம்’ என கொண்டாடி வருகிறோம்.

இந்திய கடற்படை 1971-ம் ஆண்டில் பாகிஸ்தான் மீது போர் தொடுத்தது வெற்றிப்பெற்றதன் நினைவாக டிசம்பர் 4-ம் தேதி தேசிய கடற்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

1971-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் உச்சகட்டம் அடைந்தது. அப்போது, இந்திய கடற்படைக்கு சொந்தமான 3 ஏவுகணை படகுகளான ஐ.என்.எஸ். நிப்பட், ஐ.என்.எஸ். நிர்காட், ஐ.என்.எஸ். வீர் ஆகிய கப்பல்கள் கராச்சி துறைமுகத்துக்குள் சென்று எண்ணெய் கிடங்குகளையும், 500 பாகிஸ்தான் வீரர்களையும் அழித்து துவம்சம் செய்தது.

போரின் போது பாகிஸ்தானுக்கு முழுசக்தியாகா விளங்கிய கராச்சி துறைமுகம் தகர்க்கப்பட்டது இந்தியாவிற்கு பெரும் வெற்றியாக அமைந்தது. கராச்சி துறைமுகத்தை அழிக்க குஜராத் மாநிலம் ஒகா துறைமுகத்திலிருந்து டிசம்பர் 4-ம் தேதி பகல் 2 மணியளவில் புறப்பட்டு நள்ளிரவில் கராச்சி துறைமுகத்தை நெருங்கி 90 நிமிடங்களில் 6 ஏவுகணைகளை வீசி, 4 பாகிஸ்தான் கப்பல்கள், எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை அழித்து விட்டு, எந்தவித சேதமில்லாமல் மும்பைக்கு திரும்பியது.

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மிகப் பெரிய கப்பற்படை தாக்குதல் நடைபெற்றது இதே நாளில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஆப்பரேசன் ட்ரைண்ட் ’வெற்றி பெற்றததை தொடர்ந்து ஆப்பரேசன் பைத்தான் டிசம்பர் 8 மற்றும் 9-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த வெற்றியினை கொண்டாடும் வகையில் தான் ஒவ்வொரு வருடமும் கடற்படை தினம் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

எதிரிகளிடமிருந்து நாட்டை காக்கும் பணி மட்டுமல்லாது, பேரிடர் நேரங்களில் கடற்படை மீட்புப்பணிகளிலும் ஈடுபடுகிறது. நாட்டுக்காக தியாகம் செய்த கடற்படை வீரர்களின் தியாகங்களும் போற்றப்படவேண்டும். தீபகற்ப நாடான இந்தியா, இன்னும் கடற்படை வலுப்படுத்தப்படவேண்டும்.