பெண்களின் கர்ப்பத்தில் பிளாஸ்டிக்…!

Read Time:6 Minute, 50 Second

இருபதாண்டுகளுக்கு முன்பெல்லாம் கடைக்கு சென்றாலும், கிராமப்புறத்தில் சந்தைகளுக்கு சென்றாலும் சரி துணிப்பை அல்லது கூடையை கையில் எடுத்துச் செல்வதை பார்க்கலாம்.

அதுபோக திரவ பொருட்களை வாங்க சென்றால் பீங்கான் பாட்டிலையோ, பாத்திரங்களையோ அம்மா எடுத்துச் செல்ல சொல்வார். இறைச்சி கடைக்கு சென்றால் பனை ஓலையில் வைத்து தருவார்கள்… ஆனால், இப்போது “கைவீசம்மா கைவீசு கடைக்கு போகலாம் கைவீசு… பாலிதீன் (பாயிசன்) கவரில் வாங்கி வரலாம்” என்ற நிலையில்தான் சமூதாயம் காணப்படுகிறது.

நம்முடைய பொறுப்பை தட்டிக்கழித்து பிளாஸ்டிக் பைகளை வீசுகிறோம். இவ்வாறு ஒரு தடவை பிளாஸ்டிக் பையை மண்ணிற்குள் போட்டால் அது நூறாண்டு பாவத்திற்கு சமம் என்பதை மறந்துவிடுகிறோம். இந்த பிளாஸ்டிக்குகள் மக்கள் 100 ஆண்டுகள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் பல்வேறு ஆய்வு முடிவுகள் இது மக்கவே மக்காது என்ற முடிவுடனே வெளியாகியது.

இந்த பிளாஸ்டிக் மாசுக்கள் வானுயர்ந்த மலை தொடங்கி ஆழ்கடல் வரையில் மாசாக நிறைந்துள்ளது. இந்த பிளாஸ்டிக் துகள்கள் நிலம், நீர் மற்றும் காற்றை மாசாக்குவதுடன், மனிதனுக்கு புற்றுநோய், நுரையீரல் பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது என பல ஆய்வுகள் மூலம் விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.

நாம் இயற்கையை பாழாக்குவதால் வரும் தலைமுறை பாதிக்கப்படும் என்ற எச்சரிக்கை இன்றே எதிரொலிக்க தொடங்கிவிட்டதா? என்ற கேள்வியுடன் தற்போதைய ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், இத்தாலியில் 6 பெண்களை கர்ப்பமாகியதில் இருந்து குழந்தை பெற்றுக்கொள்ளும் வரையில் கண்காணித்த ஆராய்ச்சியாளர்கள் குழு, அவர்கள் குழந்தை பெற்ற பின்னர் வெளியாகும் நஞ்சுக்கொடியை எடுத்து ஆய்வு செய்துள்ளனர்.

அதில்தான் பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தாயின் வயிற்றில் கரு உருவானதும் பிளசன்ட்டா எனப்படும் நஞ்சுக்கொடி கர்ப்பப்பையின் மேல் அல்லது கீழ் சுவரில் உருவாகும். இது வட்டு வடிவில் கருஞ்சிவப்பாக இருக்கும். தாயின் உடலுடன் குழந்தைக்கு தொப்புள்கொடி மூலம் தொடர்பு ஏற்படுத்தும். தாயின் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை குழந்தைக்கு கொடுத்தல், கழிவுகளை வெளியேற்றுதல் ஆகிய முக்கிய பணிகளை செய்வது நஞ்சுக்கொடி. ஒன்பது மாதங்களாக கரு முழு வளர்ச்சி பெற உறுதுணையாக இருக்கும் இந்த நஞ்சுக்கொடி தாயிடம் இருந்து மருந்துகளின் வீரியங்களை சென்றடையவிடாமல் தடுத்து குழந்தையை பாதுகாப்பாக வைக்கிறது.

ஒரு குழந்தை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றும் இந்த நஞ்சுக்கொடியில்தான் பிளாஸ்டிக் துகள்கள் உள்ளது என்று இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். 6 பெண்களிடம் நஞ்சுக்கொடியை வாங்கி ஆய்வு செய்த போது, 4 பெண்களின் நஞ்சுக்கொடியில் மிக சிறிய பிளாஸ்டிக் துகள்கள் காணப்பட்டது என்று ஆய்வு அறிக்கை முடிவில் தெரிவித்து உள்ளனர்.

“4 பெண்கள் நஞ்சுக்கொடியில் 4 சதவீத பகுதியை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம். அதிலேயே 12 பிளாஸ்டிக் துகள்கள் இருந்தது” என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பெண்களின் மொத்த நஞ்சுக்கொடியையும் ஆய்வு செய்து இருந்தால் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என அவர்கள் அதிர்ச்சியையும் தெரிவித்து உள்ளனர். சிவப்பு, ஆரஞ்சு, நீல நிறத்தில் காணப்பட்ட இந்த பிளாஸ்டிக் துகள்கள் உணவுப்பொருட்கள் பேக்கிங் செய்ய பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்காக இருக்கலாம் எனவும் எச்சரிக்கையாக கூறியுள்ளனர் ஆரய்ச்சியாளர்கள்.

அதுபோக நஞ்சுக்கொடியில் காணப்பட்ட பிளாஸ்டிக் துகள்களின் அளவு 10 மைக்ரான் அளவில் இருந்ததாகவும், இதனால் குழந்தைக்கான இரத்த ஓட்டத்தில் செல்ல முடியும் என்றும் எச்சரித்து உள்ளனர். இப்போதைய ஆய்வில் குழந்தைகளின் உடலில் பிளாஸ்டிக் நுழைந்ததா என்பதை மதிப்பிட முடியவில்லை எனக் கூறியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மேலும் ஆராய்ச்சி முடிவில் ஆய்வாளர்கள் குறிப்பிட்டு இருப்பதாகவது:- பிளாஸ்டிக் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு முழுமையாக அறியவில்லை. ஆனால் நீண்ட கால பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிளாஸ்டிக் துகள்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீர்குலைக்கலாம். எடை குறைவு, எழும்பு பாதிப்பு உள்ளிட்டவையும் நேரிடலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த பிளாஸ்டிக் துகள்கள் சுவாசம், உணவு மற்றும் நீர் மூலம் தாய்மார்களுக்கு சென்று இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இவ்வாறு பூமிக்கு வரவிருக்கும் ஒரு உயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பது என்பது மக்கள் மனசு வைக்காமல் எதுவும் சாத்தியமாகாது. சட்டத்தால் மட்டுமே மாற்றத்தை உருவாக்க முடியாது. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்புணர்வு இருந்தால்தான் பிளாஸ்டிக் தடை வெற்றிபெறும். “பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் கொலைகாரர்களே”… பல உயிரை காப்பாற்ற நீங்கள் கடைக்கு செல்லும் போது ஒரு பையை எடுத்துச் சென்றாலே போதும்…