கவலைகளை அகற்றும் தைப்பூசம்…

Read Time:4 Minute, 12 Second

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் திருவிழா ஆகும்.

27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரமாக திகழ்வது பூசம் நட்சத்திரம்.

அண்டத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே நீண்டநாட்களாக போர் நடைபெற்றது.

அப்போது தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்களை கொடுத்து வரும் அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை என்றும் தங்களுக்கு தலைமை தாங்கி செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்றும் என்றும் இறைஞினர்.

கருணைக்கடலான எம்பெருமான் சிவபெருமாள் தேவர்களின் முறையீட்டை ஏற்று, தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே ‘கந்தன்.’ சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. குழந்தைகள் கார்த்திகை பெண்களால், வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் ஓர் உருவமாக மாறியது. அப்படி அவதரித்தவரே முருகப்பெருமான் ஆவார். சிவபெருமானின் தேவியான அன்னை பார்வதி தேவியானவள், ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது இந்த தைப்பூச நாளில்தான்.

எனவேதான் மற்ற முருகன் கோவில்களை காட்டிலும், பழனி மலையில் தைப்பூசத்திருவிழா வெகுச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாக கொண்டே, முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினார். தேவர்களுக்கு தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வைத்து வதம் செய்து தேவர்களுக்கு மன நிம்மதியை வழங்கினார்.

எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மை தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம். ஆறுமுகப்பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள்.

தைப்பூச திருநாளில் பழனி முருகனுக்கு காவடி எடுத்தால் எந்த தீய சக்திகளும், மாந்திரீகமும், பில்லி, சூனியம், ஏவல் என எதுவும் நம்மை நெருங்காது. அதனால் தான் ‘சுக்குக்கு மிஞ்சுன மருந்தும் இல்லை, சுப்ரமணியனுக்கு மிஞ்சுன கடவுளும் இல்லை’ என்று சொல்லி இருக்கிறார்கள். தைப்பூச திருநாளில் தான் உலகம் தோன்றியதாகவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

அதே போல் சிவபெருமான், பார்வதியுடன் இணைந்து தில்லை என்னும் சிதம்பரத்தில் ஆனந்த திருநடனம் புரிந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்ததும், இந்த தைப்பூசத் திருநாளில்தான்.
இரணியவர்மன் என்ற அரசன் தில்லையம்பலத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்தான். அவனுக்கு சிவபெருமான் காட்சியளித்தது இந்த தைப்பூசத் திருநாளே ஆகும். எனவே தைப்பூசம் அன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், இறைவனுக்கு அபிஷேக மற்றும் அலங்காரங்கள் செய்யப்படும்.

தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால், தைப்பூச தினத்தில் குரு வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை அளிக்கும்…