தைவான்… சீனாவுக்கு பைடன் வைத்த ‘புது செக்…’ பதறும் சீனா…!

Read Time:6 Minute, 39 Second

உலகின் வல்லரசு தலைமையமாக தன்னை அடையாளப்படுத்துவதில் சற்றும் சமரசம் செய்ய விரும்பாத அமெரிக்காவிற்கு பொருளாதார ரீதியாக சீனா போட்டி நாடாகியுள்ளது.

மறுபுறம் உலகின் வல்லரசு என்ற அரியணையில் இருக்க விரும்பி பணியாற்றும் சீனா அமெரிக்காவிற்கு எதிரான வாதம் கொண்ட நாடுகளை தன்வசப்படுத்த விரும்புகிறது.

ஆனால் சீன மீட்டாயை எறும்புகள் புறக்கணிப்பது போன்று சீனாவை மேற்கத்திய நாடுகளும், ஓரளவுக்கு வளர்ந்த நாடுகளும் புறக்கணித்து செல்கின்றன.

குறைந்த விலையில் கலர்புல்லான கவர்ச்சிகரமான சந்தைப்படுத்தல் மூலம் குறைந்த நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளையெல்லாம் தன்னுடைய வியாபார சந்தையாக பயன்படுத்தி சீனா வளர்கிறது. ஆனால், சீனாவின் இந்த வளர்ச்சியை அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் ஏற்க விரும்பவில்லை… விரும்பவும் விரும்பாது. காரணம் அந்நாட்டை நம்ப முடியாது என்பதுதான்.

அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் அதிரடியான நடவடிக்கையால் சீனாவுக்கு பொருளாதார அளவில் நெருக்கடியை கொடுத்தார். ஆனாலும் சளைக்காமல் சீனா போராடியது. சீனா தன்னை ராணுவ ரீதியாகவும் தன்னை பலசாலியாக காட்ட முயற்சிகிறது. ஆனால், அந்நாடு தயாரிக்கும் தயாரிப்பு தளவாடங்களை பாகிஸ்தான் தவிர்த்து பிற நாடுகள் வாங்க ஆர்வம் காட்டுவது கிடையாது. அதுபோல உலக நாடுகளின் ராணுவ நடவடிக்கையிலும் சீனா தனிமையாகவே நிறுத்தப்படுகிறது.

ஜெர்மன், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான் போன்ற ஒரு பார்வை சீனாவின் மீது இன்னும் ஏற்படவில்லை…

இப்படி தான் விரும்பும் அங்கீகாரம் எதுவும் கிடைக்காத சீனா, தெற்கு சீன கடல் பகுதியில் தன்னையே பலசாலியாக எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க தேர்தலில் டிரம்ப் தோல்வியை தழுவியதை சீனா பெரிதாக கொண்டாடவிலை ஏனென்றால் டிரம்பைவிட ஜனநாயக கட்சிகாரர்களின் நடவடிக்கை ஸ்திரமான பாதிப்பை ஏற்படுத்தும் என அறிந்திருந்தது. அதேபோல் சீனா சற்றும் யோசிக்காக பிரச்சினையில் ஜோபைடனின் பார்வை திரும்பியிருக்கிறது. சீன தொட்டாலே அலறும் பிரச்சினைதான தைவான் பிரச்சினையாகும்.

சீனாவின் அருகே அமைந்திருக்கிறது சிறிய தீவு நாடான தைவான்.

1949 -ல் சீனாவில் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பின்னர் தனியாக பிரிந்த தைவான் வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது. ஆனால் தைவான் சீனாவின் ஒருங்கிணைந்த மாகாணம் என சீனா தொடர்ந்து கூறுகிறது. மேலும் தைவானை தனிநாடாக அங்கீகரிக்கும் ஒவ்வொரு நாட்டையும் பகையாளியாக பார்க்கிறது. இந்நிலையில் ஏற்கனவே நாம் பகையாளிதான் என நினைக்கும் அமெரிக்கா இவ்விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.

இதற்கு இடமளிக்கும் வகையில் சமீபத்தில் 15 சீனப் போர் விமானங்கள் தைவானின் வான் பகுதிக்குள் அத்துமீறியது. இதனை சரியாக பயன்படுத்த நினைத்த அமெரிக்காவும் தைவானிற்கு அனைத்து விதமான ஆதரவுகளையும் தொடர்ந்து அளிப்போம் எனக் கூறியது. மேலும், தைவான் கடல் பகுதிக்கு ஒரு விமானம் தாங்கிய கப்பலை அனுப்பியது.

இதற்கிடையே பல சீனப் போர் விமானங்கள் எல்லையில் ஊடுருவியதாக தைவான் கூறியது.

தற்போது அமெரிக்காவில் இருக்கும் ஜோ பைடன் நிர்வாகம் தைவானிற்கு எந்த அளவு ஆதரவை ராணுவ உதவிகளை அளிக்கும் என்பதை சோதித்து பார்க்க சீனா முயல்வதாக பாதுகாப்பு துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தைவானின் பாதுகாப்பை அமெரிக்கா தனது கடற்படை மூலம் உறுதி செய்து வருகிறது.

சுதந்திரம் அடைய மேற்கொள்ளும் தைவானின் எந்த ஒரு முயற்சிக்கும் “போர் என்று பொருள்” என கடும் கோபத்துடன் சீனா எச்சரித்துள்ளது. ஆனால், சீனாவின் இந்த எச்சரிக்கை துரதிர்ஷ்டவசமானது, என அமெரிக்கா கூறியுள்ளது. தைவானை பொறுத்தவரையில் எளிதில் வீழ்த்தக் கூடிய பிராந்தியமாக சீனா பார்க்கிறது சீனா. ஆனால், தைவானோ தனி அரசியலமைப்பு சட்டம், ராணுவம், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்டிருப்பதால் தன்னை ஒரு தனி நாடாக பறைசாற்றி கொள்கிறது.

தைவான் அரசு அந்த நாட்டை ஒரு சுதந்திர நாடாக ஒரு முறைப்படி அறிவிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது குறித்து சீனா கவலை கொண்டுள்ளதாக வல்லுநர்கள் கருதுகிறார்கள். தைவான் ஏற்கனவே ஒரு சுதந்திர நாடு அதை மீண்டும் சுதந்திர நாடாக பிரகடனப்படுத்துவது தேவையற்றது என தொடர்ந்து கூறி வருகிறார் அந்நாட்டு அதிபர் சாய் இங்-வென்.

ஏற்கனவே அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவு நல்ல நிலையில் இல்லை என்றாலும் மனித உரிமை பிரச்சனைகள், வர்த்தகப் பிரச்சனைகள், ஹாங்காங் விவகாரம், தைவான் விவகாரம் என சீனா மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்க பைடன் நிர்வாகம் விரும்புவதாக தெரிகிறது. சீனாவுக்கு செக் வைக்க அமெரிக்கா கையில் எடுத்திருக்கும் இந்நகர்வு பயனளிக்குமா என்பது போக போகதான் தெரியும். நம்மளை போல உலக நாடுகளும் இதனை உற்று நோக்குகின்றன.