அரிதான புலிகள்… இந்தியாவின் தேசிய விலங்கானது எப்படி…? சுவாரஸ்ய தகவல்கள்

Read Time:8 Minute, 46 Second

கம்பீர நடை, கூர்மையான பார்வை இவ்விரண்டிலுமே மனிதர்களை எளிதாக மிரட்டும் புலிகளை பற்றியும், அது இந்திய தேசிய விலங்கானது எப்படி என்பது பற்றியும் தற்போது தெரிந்துக்கொள்வோம்…

பூனை இனத்தை சேர்ந்த புலியின் உடல் பழுப்பு கலந்த வெளிர் சிவப்பு நிற தோலை கொண்டது. உடல் முழுவதும் வெள்ளை மற்றும் கருப்பு நிற கோடுகள் பரவி கிடக்கும். இந்த கோடுகள் மனிதர்களின் கைரேகைகளை போன்று தனித்துவமான ஒன்றாகும். புலி உடலின் நடுப்பகுதியும், அடிப்பகுதியும் வெண்மையாக உள்ளன. முகத்தைச் சுற்றி ஒரு வெண்ணிற ‘வளையம்’ கொண்டது.

ராயல் பெங்கால், சைபீரியன், சுமத்ரன், இந்தோ-சைனீஸ், மலையன், தெற்கு சீன புலிகள், காஸ்பியன், ஜாவன் மற்றும் பாலி என 9 இனங்களை கொண்டது ‘புலி’. இதில் கடைசி நான்கு இனங்கள் தற்போது இல்லை மனிதர்களால் அழிந்து விட்டன.

புலிகள் பெரும்பாலும் மான்களை விரும்பி சாப்பிடுகிறது. அடுத்ததாக காட்டு பன்றி, நீர் எருமை, கொம்பு மான்களை சாப்பிட ஆர்வம் காட்டும். இதோடு கரடி, நாய், சிறுத்தை, முதலை, மலைபாம்புகளையும் வேட்டையாடும் தன்மையை கொண்டது.

தண்ணீரில் நீந்தும் தன்மையுடையதால், நீருக்குள்ளும் வேட்டையாடும் துடிப்பை கொண்டது. விலங்குகளை வேட்டையாடும் போது முதலில் அதன் கழுத்தைதான் குறி வைக்கும்.

வரலாற்று ரீதியாக புலிகளின் வாழ்விடம் என்பது துருக்கியில் தொடங்கி தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகள் வரை நீள்கிறது. ஆசியக் கண்டத்தின் கடற்கரை பகுதிகளிலும் வாழ்விடம் கொண்டிருந்தது. இப்போது தெற்கு, தென்கிழக்கு ஆசியா பகுதிகள், சீனா மற்றும் ரஷ்யாவின் கிழக்கு பகுதிகளில் புலிகள் வாழ்கின்றன.

புலிகள் அனைத்துவித பருவநிலை காலங்களிலும் வாழும் தன்மையை கொண்டிருக்கிறது. செடி கொடிகள் அடர்ந்த காடுகள், மரங்கள், சதுப்பு நில காடுகள், புல்வெளிகளிலும் வாழும் தன்மையையும் தன்னுள் கொண்டது.

புலிகளின் இனப்பெருக்க மாதங்கள் நவம்பரிலிருந்து ஏப்ரல் வரையிலாகும். இனப்பெருக்க காலம் என்பது 16 வாரங்கள் ஆகும். ஒருமுறைக்கு 3 முதல் 4 வரையிலான குட்டிகளை ஈனும். குட்டிப் போட்ட 8 வாரங்கள் வரையில் குட்டிகள் தாய் புலிகளிடம் கொண்டிக்கும். அவை இரண்டரை வருடங்களில் தாய் புலியை விட்டு வெளியே வரும். புலிகள் தனிமையாக வாழும் பழக்கம் கொண்டது.

வேட்டையாடுவதற்கு உகந்த, பரந்த இடங்களையே வாழ்வதற்கு தேர்ந்தெடுக்க கூடியது. உலகில் இந்தியாவில் தான் அதிகமான எண்ணிக்கையிலான புலிகள் உள்ளன. இதுவரை சுமார் 27 புலிகள் சரணாலயத்தை உருவாக்கி, அழிந்து வரும் இனமான அரிதான புலிகளை பாதுகாத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வன விலங்கு ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் காப்பகத்துக்கான அனுமதியை சமீபத்தில் மத்திய அரசு வழங்கியது.

மேலும் தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை, முதுமலை, ஆனைமலை, சத்தியமங்கலம் என நான்கு புலிகள் காப்பகங்கள் உள்ளன. இதில் மூன்று புலிகள் காப்பகங்கள் மேற்கு மண்டலத்தில் உள்ளது. புலிகள் வாழ்வதற்கு அதன் வாழ்விடம் மிகவும் முக்கியமானது.

ஒவ்வொரு புலியும் தனக்கான எல்லை கோட்டை வரையறுத்து வாழும். ஒரு பெண் புலி, தனக்கான வாழ்விடத்தை வரையறுக்கும். மூன்று, நான்கு பெண் புலிகள் வாழ்கிற பகுதியை ஒரு ஆண் புலி தனக்கான வாழ்விடமாக கொண்டிருக்கும். கிடைக்கும் இரை விலங்கை கொண்டே, தனது வாழ்விடத்தை தீர்மானித்து கொள்கிறது புலி. நிறைய இரை இருந்தால் குறைந்த இடத்தையே வாழ்விடமாக கொள்ளும். இரை குறைவாக இருந்தால் அதிக இடத்தை வாழ்விடமாக கொண்டிருக்கும். ஐந்து முதல் 50 சதுர கிலோமீட்டர் வரையில் ஒரு புலியின் வாழ்விடம் இருக்கும்.

புலிகள் சராசரியாக 15 ஆண்டுகளும் அதிகபட்சமாக 17, 18 ஆண்டுகளும் உயிர் வாழும் விலங்காகும். பெண் புலி, தனது குட்டியை இரண்டாவது வயதிலேயே துரத்திவிட்டுவிடும். புதிதாக பிறக்கும் குட்டிகளுக்கு வாழ்விடங்கள் தேவையாகும். எனவே வாழ்விடச் செழுமையை பொறுத்தே புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

உலகிலேயே மலைப்பகுதியில் புலிகள் அதிக அளவு இருப்பது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தான். அதிலும் குறிப்பாக ஒரே வாழ்விடத்தில் புலிகள் அதிகம் இருப்பது நீலகிரி உயிர்க்கோள காப்பகத்திலாகும். தமிழகத்தில் கோவை, நீலகிரி, சத்தியமங்கலம், கேரள மாநிலத்தில் வயநாடு, மன்னார்க்காடு, அமைதிப்பள்ளத்தாக்கு, கர்நாடகத்தின் பந்திப்பூர், நாகர்கொளே பகுதிகளை உள்ளடக்கியது தான் நீலகிரி உயிர்க்கோள காப்பகமாகும்.

இந்தியாவின் தேசிய விலங்கானது எப்படி…?

முதன் முதலில் சுதந்திர இந்தியாவின் தேசிய விலங்காக புலி இல்லை. சுதந்திரத்துக்கு பின்னர் 1948-ல் இந்தியாவின் தேசிய விலங்காக ஜவஹர்லால் நேரு தலைமையிலான மத்திய அரசு ஆசிய சிங்கத்தையே அறிவித்தது. ஆனால் 1973 ஆம் ஆண்டு இந்திய வனவுயிர் வாரியம் புலியை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவித்தது. அதற்கு காரணம் சிங்கம் குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவில் மட்டுமே இருந்தது. ஆனால் புலிகள் நாடு முழுவதும் காடுகளில் பரவி காணப்பட்டது.

மேலும் கருணை, வலிமை, சுறுசுறுப்பு மற்றும் மகத்தான சக்தி ஆகியவற்றின் கலவையான புலிக்கு இந்தியாவின் தேசிய விலங்கு என்ற இடத்தின் பெருமையை பெற்றுத்தந்துள்ளது.

அறியப்பட்ட எட்டு இனங்களில், இந்திய இனமான, ராயல் பெங்கால் புலி, வடமேற்கு பிராந்தியத்தைத் தவிர நாடு முழுவதும் மற்றும் அண்டை நாடுகளான நேபாளம், பூட்டான் மற்றும் பங்களாதேஷிலும் காணப்படுகிறது. எனவே தான் ராயல் பெங்கால் புலி இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் சோழர்கள் காலத்தை பொற்காலம் எனக் கூறுவார்கள். வளமையில் மட்டுமல்ல, வலிமையிலும் சிறந்தவர்கள் சோழர்களாவர். குறிப்பாக, ராஜராஜன், ராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழர்களின் கொடி கடல் கடந்து, பல நாடுகளிலும் பட்டொளி வீசிப் பறந்தது. இத்தகு வீரம் பொருந்திய சோழர்களின் கொடி புலிக்கொடியாகும். அவர்களது அடையாள முத்திரை புலிச் சின்னமாகும்.

வலிமை, விரைந்தோடும் இயல்பு, பேராற்றல் கொண்ட புலிகள் எண்ணிக்கை இந்தியாவில் உயர்ந்து இருந்தாலும் அவைகளுக்கான வாழ்விட சூழலை பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளது.

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை சரிபார்க்க, ‘ப்ராஜெக்ட் புலி‘ என்ற திட்டம் ஏப்ரல் 1973 இல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் நாட்டில் இதுவரை 27 புலி சரணாலயங்கள நிறுவப்பட்டுள்ளன, இது 37,761 சதுர கி.மீ பரப்பளவை கொண்டுள்ளது.