சீன சொத்துக்கள் சூறை… சீனா மீது மியான்மர் மக்களின் கோபம் ஏன்?

Read Time:6 Minute, 27 Second

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது.

மேலும் நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை ராணுவம் பிரகடனம் செய்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத்தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்தி கொண்டிருக்கிறது மியான்மர் ராணுவம்.

ஆனால் மியான்மர் மக்கள் ராணுவ ஆட்‌சியை ஏற்க மறுத்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தினமும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை மியான்மர் ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. இருப்பினும் மியான்மரில் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. அதேபோல் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதும் தொடர்கிறது.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் மியான்மரில் உள்ள சீன தூதரகங்கள் மற்றும் சீன நிறுவனங்கள் முன்பு திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் மியான்மரின் மிகப்பெரிய நகரமான யாங்கூனில் ஞாயிற்றுக்கிழமை ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கு உள்ள சீன சொத்துக்களை சூறையாடினர்.

யாங்கூனில் உள்ள ஹலிங் தார் யார் மற்றும் ஸ்வேபிதா சீனாவுக்கு சொந்தமான 10 கட்டமைப்புகளை போராட்டக்காரர்கள் தீயிட்டு எரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் பாதுகாப்பு கிடங்குகள் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. சீன உணவகமும் தாக்குதலுக்கு உள்ளானது.

‘‘தொழிற்சாலைகள் சூறையாடப்பட்டு அழிக்கப்படுகின்றன. பல சீன ஊழியர்கள் காயமடைந்துள்ளனர் மற்றும் மேலும் பலர் உள்ளே சிக்கியுள்ளனர்,’’ என்று மியான்மரில் உள்ள சீன தூதரகம் அதன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.

அதனைத் தொடர்ந்து ஹலிங் தார் யார், ஸ்வேபிதா நகரங்களில் கூடுதல் ராணுவம் குவிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் அவர்கள் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு ரப்பர் குண்டுகளால் சுட்டனர். அதேசமயம் போராட்டக்காரர்கள் கையில் கிடைத்த பொருள்களை கொண்டு தாக்கவும், வீரர்கள் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல் மாண்டலே உட்பட மியான்மரின் மற்ற நகரங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியாகினர்.

மேலும் நாடு முழுவதும் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 80-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து உள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது. இதனிடையே வன்முறைகளை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மியான்மர் அரசை கேட்டுக் கொண்ட சீன தூதரகம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

மேலும் மியான்மரில் உள்ள சீன நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று மியான்மர் ராணுவத்தை சீன அரசு வலியுறுத்தியது.

சீன அரசின் இந்த கோரிக்கையை தொடர்ந்து யாங்கூனின் ஹலிங் தார் யார் மற்றும் ஸ்வேபிதா நகரங்களில் ராணுவ சட்டம் அமல்படுவதாக ராணுவம் அறிவித்து உள்ளது.

‌சீன அரசு மியான்மர் ராணுவத்துக்கு ஆதரவளிப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் போன்ற சர்வதேச அமைப்புகளின் நடவடிக்கையில் இருந்து மியான்மரை சீனா காப்பாற்றி வருகிறது. மியான்மரில் தற்போது ராணுவம் ஆட்சியை கைப்பற்றியிருப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கண்டனம் தெரிவிப்பதையும் தடுத்துவிட்டது. மியான்மர் நாட்டின் வளங்கள் சார்ந்த மிகப்பெரிய பொருளாதார திட்டங்களை சீனா கொண்டிருக்கிறது.

வங்க கடலுடன் நேரடி ஆதிக்கத்தை செலுத்துவதற்கு மியான்மரின் க்யாக்பியூ நகரில் துறைமுகம் ஒன்றை அமைக்கிறது. மேலும், அங்கிருந்து சீனாவின் குன்மிங் நகருக்கு பொருட்களை கொண்டுச் செல்ல பொருளாதார சாலையும் அமைக்கிறது. இதுபோக 2 ரயில் வழித்தடங்களுக்கும் பிற உள்கட்டமைப்பு பணிகளுக்கும் முதலீடு செய்துள்ளது.

தற்போது ராணுவம் ஆட்சியை வசமாக்கியிருந்தாலும் தன்னுடைய நோக்கத்தை அடைவதில் குறியாக இருக்கிறது. ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய போது, உலக நாடுகளுடன் கண்டனம் தெரிவித்த நிலையில் இது உள்நாட்டு விவகாரம் என்றும் இதில் தலையிட்டால் நிலைமை மோசமாகும் என்றும் சீனா கூறிவிட்டது. மியான்மரில் அசாதாரண சூழல் ஏற்பட்டால் முதலீடுகளில் பாதிப்பு ஏற்படும் என்பதில் சீனா உஷாராக இருக்கிறது. இந்நிலையில் சீன சொத்துக்களை மக்கள் சூறையாட தொடங்கியுள்ளனர்.