கபாலீசுவரர் கோவில் பங்குனி திருவிழா 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது!

Read Time:2 Minute, 13 Second

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பங்குனி திருவிழா மற்றும் விடையாற்றி கலை விழா வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் பகல், இரவு நேரங்களில் சாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கிறது. 26-ந் தேதி அறுபத்து மூன்று நாயன்மார்களோடு திருக்காட்சி திருவிழாவும் நடக்கிறது.

தொடர்ந்து முக்கிய திருவிழாவான தேரோட்டம் வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று காலை 8 மணி அளவில் சுவாமி, அம்பாள் திருத்தேரில் எழுந்தருள்கின்றனர். 8.45 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறுகிறது.

அறுபத்து மூன்று நாயன்மார்கள் வீதி உலா

பங்குனி விழாவையொட்டி 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை திருஞானசம்பந்த சாமிகள் எழுந்தருளலும், பூம்பாவை உயிர்பெற்று எழுகின்ற நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 2.45 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு திருக்காட்சி திருவிழா நடக்கிறது. மாலை அறுபத்து மூவர் நாயன்மார்கள் புடை சூழ, விநாயக பெருமான், கற்பகாம்பாள், உடனுறை கபாலீஸ்வரர், வள்ளி தெய்வாணை, முருகன் ஆகியோர் வீதியுலா திருவிழா நடைபெறும்.

தொடர்ந்து 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாணத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவில் 10 நாட்களிலும் பகல், இரவு காலங்களிலும் ஐந்திருமேனிகள் திருவீதி உலா மற்றும் நாதஸ்வர நிகழ்ச்சிகள் மற்றும் இரவு 6.30 மணிக்கு விடையாற்றி சொற்பொழிவுகளும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் பணியாளர்கள் பலர் செய்து வருகின்றனர்.