இது மேற்கு வங்க தர்மயுத்தம்… பாஜக – மம்தா இடையே கடும் போட்டி…

Read Time:7 Minute, 18 Second

நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கமாய் ஈர்த்திருக்கிறது மேற்கு வங்க தேர்தல்.

8 கட்டங்களாக நடக்க உள்ள சட்டசபை தேர்தல் ஒரு தர்ம யுத்தமாக மாறிக்கொண்டிருக்கிறது.

இங்கு கேள்வி திரிணாமுல் காங்கிரசா அல்லது பா.ஜ.க.வா என்ற மோதலுக்கு மத்தியில், மம்தாவா அவரால் வளர்க்கப்பட்ட சுவெந்து அதிகாரியா என்ற போட்டியும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் வகையில் மம்தா பானர்ஜி ஆட்சியைப் பிடிப்பாரா அல்லது பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்குமா என தேர்தல்களம் அனல் பறக்கிறது.

நந்திகிராமில் வேட்பு மனுதாக்கல் செய்யப்போன இடத்தில் மம்தா தாக்கபட்டார், அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது என்ற தகவல்கள் அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இது ஒரு நாடகம் என்று பா.ஜ.க. தரப்பு ஒரு பக்கம் சொல்கிறது. ஆனால், தன்னை தாக்கியதற்கு பின்னால் பெரும் சதி நடந்திருக்கிறது என்று தான் வங்கப்புலி உறுமி வருகிறது.

இந்த காயம், மம்தாவை பிரசார களத்தில் இருந்து அப்புறப்படுத்துமா என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அவர் நான் சக்கர நாற்காலியில் வந்தாவது பிரசாரம் செய்வேன் என்று கர்ஜித்தார். அதேபோன்று பிரசாரமும் செய்கிறார்.

மேற்கு வங்காளத்தில் ஆட்சியைப் பிடித்தால், அதை பொன்னான பூமியாக மாற்றிக்காட்டுவதாக பா.ஜ.க. தலைவர்கள் சூளுரைத்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

294 இடங்களை கொண்டுள்ள சட்டசபையில் 200 இடங்களை பிடித்தாக வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் செய்கிறார்.

பிரசார களத்தில் மோடி, அமித்ஷா என இருவரும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக மாறியுள்ளனர்.

அவர்களுக்கு கூடக்கூடிய கூட்டம் ஓட்டு வங்கியாக மாறுமா? என்ற கேள்வி எழுந்தாலும், பாஜகவினர் வாக்குச்சாவடி அளவில் கட்சியை வலுவாக்க பணியாற்றி வருகிறார்கள்.

இடதுசாரிகளின் கோட்டையாக மாறி இருந்த மேற்கு வங்காளத்தை திரிணாமுல் காங்கிரசின் கோட்டையாக மாற்றிக்காட்டிய மம்தா பானர்ஜி இப்போது தனது அரசியல் வாழ்வின் கடினமான காலகட்டத்தை கடந்து வருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

யாரையெல்லாம் தனது தளகர்த்தர்கள் என்று நம்பி வளர்த்தாரோ அத்தனை பேரும் பா.ஜ.க.வுக்கு தாவி விட்டார்கள். ஆனாலும் மம்தா பானர்ஜி நிலை குலைந்து போய் விடவில்லை.

எப்போதும் போல எச்சரிக்கை மற்றும் சவாலுடன் அவருடைய பிரசாரம் செல்கிறது. அதே நேரம் பா.ஜ.க.வையும் அங்கு குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

2014 நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 2 இடங்களை வென்ற பா.ஜ.க., கடந்த தேர்தலில் 18 இடங்களை பிடித்தது. ஓட்டு விகிதமும் 40.64 சதவீதமாக உயர்ந்தது. அப்போது திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையேயான ஓட்டு வித்தியாசம் வெறும் 3 சதவீதம்தான். இந்த நம்பிக்கையில் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக வியூகம் வகுத்து களமிறங்கிருக்கிறது.

ஆனால் இதையெல்லாம் கண்டு மம்தா பானார்ஜி அஞ்சி விடவில்லை.

தனது கவர்ச்சிகரமான ஆளுமையுடன், கிராமப்புற வங்காளம், பெண்கள் மத்தியில் அசைக்க முடியாத சக்தியாக அவர் இன்றைக்கும் திகழ்கிறார். நலத்திட்டங்களின் மிகப்பெரிய பயனாளிகளாக திகழ்கிற கிராமப்புற மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மின்னுகிறார் மம்தா பானர்ஜி.

மேலும், டார்ஜிலிங் மற்றும் வடக்கு வங்காள பகுதிகளில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு பின்னால் இருந்த கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சியை திரிணாமுல் காங்கிரஸ் தன் வசப்படுத்தி இருக்கிறது.

கூர்கா ஜன்முக்தி மோர்ச்சாவின் நிறுவனர் தலைவர் பீமல் குருங், மம்தாவுக்கு ஆதரவை தெரிவித்து உள்ளார். 2009 முதல் பாஜகவுடன் இருந்த கட்சி இப்போது திரிணாமுல் காங்கிரஸ் வசம் சென்றுவிட்டது. நீயா, நானா என்கிற அளவுக்கு போட்டி கடுமையாகி வருகிற நிலையில் இந்த எண்ணிக்கை பெரியது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

வடக்கு வங்காளத்தில் மொத்தம் 54 தொகுதிகள் இருக்கின்றன.

இங்குள்ள 8 நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க. 7 தொகுதிகளை கடந்த தேர்தலில் கைப்பற்றியது. இதற்கு பின்னால் இருந்தது கூர்கா ஜன்முக்தி மோர்ச்சாதான் அமைப்பாகும்.

ஆனால் தற்போதைய தேர்தலில் இந்த கட்சி, திரிணாமுல் காங்கிரசுடன் கரம் கோர்த்திருப்பது, கடந்த நாடாளுமன்ற தேர்தலை வைத்து இந்த வடக்கு வங்காளத்தை மொத்தமாக பிடித்து விடலாம் என கணக்கு போட்டு வருகிற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இந்த கட்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் 3 இடங்களை விட்டுக் கொடுத்திருக்கிறது.

எப்படியும் இந்த முறை மேற்கு வங்கத்தில் ஆட்சியைப்பிடித்து மம்தாவுக்கு முடிவுரை எழுதி விட வேண்டும் என்று பா.ஜ.க. அதிரடியாக களமிறங்கியுள்ளது. அதற்கான அத்தனை வேலைகளையும் களம் இறங்கியும் செய்து வருகிறது. மறுபுறம் வங்கப்புலி மம்தாவோ, நானேதான் வங்கத்தின் மகள், வெற்றிக்கொடி கட்டிக்காட்டுவேன் என்று வரிந்து கட்டிக்கொண்டிருக்கிறார்.

நடுநிலையாளர்கள் மற்றும் கருத்துக்கணிப்புக்கள் சொல்வது, திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும், ஆனால் முந்தைய தேர்தல்களை விட குறைவான இடங்களையே கைப்பற்றும் என்பதாக இருக்கிறது. இந்த நீயா நானா போடியில் நடக்கப்போவது என்ன? மக்களின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்ள மே 2-ல் கிளைமாக்ஸ் வரையில் காத்திருப்போம்.