ஓட்டலில் சாப்பிட்டு பணம் தர மறுத்து தகராறு செய்த தி.மு.க.வினர் – வீடியோ!

Read Time:2 Minute, 24 Second

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கே.ஆர்.ஆர்.கலையரங்கம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான வாகன நிறுத்தும் இடம் உள்ளது. இந்த பகுதியில் ஓட்டல்கள் உள்பட பல்வேறு கடைகள் உள்ளன.

நேற்று முன்தினம் இரவு பழனியில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதற்கு கொடைக்கானல் மேல்மலை கிராமத்தை சேர்ந்த தி.மு.க.வினர் சிலர் சென்றுவிட்டு திரும்பினர். பின்னர் அவர்கள் கொைடக்கானல் கே.ஆர்.ஆர். கலையரங்கம் பகுதியில் உள்ள ஒரு அசைவ ஓட்டலில் சாப்பிட்டனர்.

இதற்கு கட்டணமாக 1,460 ரூபாயை கடையின் உரிமையாளர் கேட்டார். அப்போது தி.மு.க.வினர் 460 ரூபாய் மட்டுமே தரமுடியும். நாங்கள் அவ்வளவுக்குதான் சாப்பிட்டோம் என்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடை உரிமையாளருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அருகில் உள்ள கடைக்காரர்கள் வந்து தகராறில் ஈடுபட்ட தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி முழுத்தொகையை செலுத்துமாறு வற்புறுத்தினர். இதையடுத்து தி.மு.க.வினர் முழுத்தொகையை செலுத்தி விட்டு அங்கிருந்து சென்றனர்.

இதனிடையே தி.மு.க.வினர் தகராறு செய்ததை அப்பகுதியில் இருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனர். இதன் காரணமாக கொடைக்கானல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் கணேசன் கூறுகையில், தி.மு.க.வினர் சாப்பிட்டதற்கு உரிய தொகையான 1,460 ரூபாயை கேட்டபோது அவர்கள் தாங்கள் குறைவாகவே சாப்பிட்டதாகவும், அதற்கு ரூ.460 மட்டுமே போதுமானது என்றும் கூறி தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து அருகில் உள்ள கடைக்காரர்கள் வந்து கேட்டனர். இதைத்தொடர்ந்து சமரசம் செய்யப்பட்டு தி.மு.க.வினர் மீதி தொகையையும் செலுத்தினர் என்றார்.