முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரும் வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Read Time:3 Minute, 38 Second

கேரளாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான முல்லைப் பெரியாறு அணையின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய மேல்முறையீட்டு மனு தொடர்பாக மத்திய அரசு, கேரள, தமிழக அரசுகள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேல்முறையீட்டு மனு

இது தொடர்பாக கொச்சியை சேர்ந்த சுரக்ஷா அறக்கட்டளை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியதாவது:-

125 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள 8 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலத்துக்கு கேரள அரசு உரிமையாளராக உள்ளது. சென்னை மாகாண அரசுக்கும், திருவிதாங்கூர் மன்னருக்கும் இடையே முல்லைப்பெரியாறு அணையின் நீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பான ஒப்பந்தம் 1886-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளை மீறினால் அதை உடனடியாக ரத்து செய்ய நிலத்தின் உரிமையாளரான கேரள அரசுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரவிட வேண்டும்

அணைகளுக்கான பராமரிப்பு வழிகாட்டுதல் விதிகளின்படி, பேரிடரின்போது அணைக்கு கீழ் பகுதியில் உள்ள மக்களை பத்திரமாக வெளியேற்ற கால்வாய் கட்டப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை தமிழக அரசு அதை கட்டவில்லை. இது ஒப்பந்தத்தை மீறும் வகையில் உள்ளது.

மேலும் ஒப்பந்தத்தை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்டின் 2014-ம் ஆண்டு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டதை மேற்பார்வைக் குழுவும் செய்யத் தவறியுள்ளது. இதனால், அணையின் கீழ்ப்பகுதியில் வசிக்கும் 35 லட்சம் மக்கள் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளனர். எனவே கேரளாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான முல்லைப் பெரியாறு அணையின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்திய புவியியல் ஆய்வு மையம் முன்மொழிந்தபடி, பாதுகாப்புச் சுவரை கட்டுவதற்கு கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பதில் அளிக்க உத்தரவு

இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வில்ஸ் மேத்யூ, கேரளாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையில் கையெழுத்தான முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மீறப்படும்போது, அதை ரத்து செய்ய கேரள அரசுக்கு உரிமை உள்ளது என்று வாதிட்டார்.

வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக மத்திய அரசு, கேரள, தமிழக அரசுகள் பதில் அளிக்கவும், இந்த வழக்கை முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக ஜோ ஜோசப் தாக்கல் செய்த வழக்குடன் இணைக்கவும் உத்தரவிட்டனர்.