அதிகார நந்தி வாகனத்தில் மயிலாப்பூர் கபாலீசுவரர்..! கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி

Read Time:3 Minute, 49 Second

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நடந்து வரும் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கபாலீசுவரர் சாமி அதிகார நந்தி வாகனத்திலும், கற்பகம்பாள் கந்தருவி வாகனத்திலும், முருகன் கந்தருவன் வாகனத்திலும், மூஷிகம் வாகனத்தில் விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி புறப்பாடு நடந்தது.

கோவில் தெற்கு மாட வீதியில் உள்ள தெப்பக்குள படித்துறையில் காலை 9 மணி அளவில் திருஞானசம்பந்தர் திருமுலைப்பால் விழா நடந்தது. இரவு பூதன், பூதகி, தாரகாசுர வாகனங்களில் சாமி, அம்பாள் புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நடந்து வரும் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அதிகார நந்தி வாகனத்தில் சாமி, அம்பாள் திருவீதி உலா வந்தபோது எடுத்த படம்.

கொரோனா தடுப்பூசி

சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக கோவிலுக்கு சொந்தமான நூலகத்தில் மாநகராட்சி சுகாதாரத்துறை பணியாளர்கள் தனியாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினசரி காலை 9 மணியில் இருந்து மாலை 3 மணி வரை இலவசமாக தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதனை பக்தர்கள் ஆர்வமாக வந்து போட்டு செல்கின்றனர்.

பக்தர்களுக்கு கட்டுப்பாடு குறித்து கோவில் அதிகாரிகள் கூறியதாவது:-

கோவிலில் ஆண்டு திருவிழாவான பங்குனி திருவிழா நடந்து வருகிறது. நோய் தொற்று பரவாமல் இருக்க அரசு பிறப்பித்துள்ள நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. முக கவசம் அணியாத பக்தர்களுக்கு முக கவசம் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கோவிலில் ஒரு நாளைக்கு 3 முறையாவது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வெப்பநிலையை சோதித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

காய்ச்சல் உள்ளவர்களை அருகிலுள்ள மாநகராட்சி மருந்தகத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக கிழக்கு கோபுரத்திற்கு அருகே நடமாடும் தடுப்பூசி வாகனமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. பக்தர்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பங்குனி திருவிழாவின்போது, மயிலாப்பூரில் உள்ள 4 மாட வீதிகள், கச்சேரி சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை உள்ளிட்ட தெருக்களில் உணவு மற்றும் மோர், குளிர்பானங்கள் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அதனை வினியோகிக்க வேண்டாம் என்று அறக்கட்டளைகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. முக்கிய திருவிழாக்களும் ‘யூடியூப்’ சேனலில் ஒளிபரப்பப்படுவதால் பக்தர்கள் நேரில் வருவதை தவிர்க்கலாம். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.