சொந்த ஊருக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள் ரெயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்!

Read Time:1 Minute, 46 Second

கொரோனா ஊரடங்கு அச்சம் மற்றும் சட்டமன்ற தேர்தல், ஹோலி பண்டிகை கொண்டாட என பல்வேறு காரணங்களால் வடமாநில தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். இதன் காரணமாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதி வருகிறது.

வடமாநில தொழிலாளர்கள்

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். இதுதவிர வேலை தேடி திருப்பூருக்கு தினமும் வெளிமாநிலம், வெளிமாவட்டம் என பல்வேறு பகுதிகளில் இருந்து பலரும் வந்து கொண்டிருக்கிறார்கள்.

தொழில்துறையினருக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருந்து வருவதால் உடனே அவர்களை வேலைக்கு சேர்த்து விடுகிறார்கள்.

வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஹோலிபண்டிகை மற்றும் தீபாவளி பண்டிகையின் போது மட்டும் தான் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் மீண்டும் ஊரடங்கு அமலாகுமோ என்ற அச்சம் மற்றும் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்கும், சட்டமன்ற தேர்தல் வருவதாலும் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தற்போது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதி வருகிறது.