இந்திய அரசியலை உலுக்கும் ரூ. 100 கோடி மாமூல் விவகாரம்…! நடந்தது என்ன…?

Read Time:5 Minute, 6 Second

மராட்டிய மாநிலம் தலைநகர் மும்பையில் உலக பணக்காரர்களில் ஒருவரான ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் 27 மாடி ஆடம்பர வீட்டின் அருகே கடந்த மாதம் வெடிகுண்டு கார் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தநிலையில் வெடிகுண்டு காரின் உரிமையாளர் என கூறப்பட்ட தானேயை சேர்ந்த ஹிரன் மன்சுக் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்த வெடிகுண்டு கார் வழக்கில் மும்பை போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசேவை தேசிய புலனாய்வு முகமை கைது செய்ததை அடுத்து மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் ஊர்காவல் படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். கமிஷனருக்கு கீழ் பணியாற்றி போலீஸ் அதிகாரிகள் மன்னிக்க முடியாத தவறை செய்ததால் பரம்பீர் சிங் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறியிருந்தார்.

பரம்பீர் சிங்

இந்தநிலையில் மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் ‘உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கைதான போலீஸ் அதிகாரி சச்சின் வாசே மூலமாக மும்பை போலீசாரை மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தருமாறு கூறினார்’ என்ற திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது மராட்டிய அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல் அமைச்சராக உள்ளார்.

இதற்கிடையே வெடிகுண்டு கார் வழக்கில் இருந்து தப்பிக்க முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் பொய்யான குற்றச்சாட்டை தன் மீது சுமத்துவதாக உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மறுப்பு தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் எதிர்க்கட்சி தலைவரான பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட அந்த கட்சியின் தலைவர்கள் அனில் தேஷ்முக் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

அனில் தேஷ்முக்

இந்தநிலையில் பரம்பீர் சிங்கின் இந்த குற்றச்சாட்டு குறித்து அனில் தேஷ்முக்கியின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் பேசுகையில்,

உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது பரம்பீர் சிங் கூறியுள்ள குற்றச்சாட்டு தீவிரமானது. எனவே, இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். அதேநேரத்தில் பணியிடமாற்றம் செய்யப்பட்ட அவரின் குற்றச்சாட்டு கண்மூடித்தனமாக உள்ளது. வெடிகுண்டு கார் வழக்கில் சிக்கி உள்ள சச்சின் வாசேவை மீண்டும் பணியில் சேர்க்க முடிவு செய்தது பரம்பீா் சிங் தான். சச்சின் வாசேவை கடந்த ஆண்டு மீண்டும் பணியில் சேர்த்ததற்கு முதலமைச்சரோ, உள்துறை அமைச்சரோ பொறுப்பு இல்லை எனக் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே முடிவு செய்வார். மேலும் பரம்பீர் சிங்கின் குற்றச்சாட்டு குறித்து முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஜூலியோ ரிபரியோவின் உதவியை உத்தவ் தாக்கரே பெறலாம்.

சரத்பவார்

பரம்பீர் சிங்கின் குற்றச்சாட்டு ’மகாவிகாஸ் அகாடி அரசு’க்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் அவை தோல்வியில் தான் முடியும் எனக் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே உள்துறை அமைச்சர் அனில்தேஷ்முக் பதவி விலக வலியுறுத்தி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்விவகாரத்தினால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டுள்ளது. இது குறித்து சிபிஐ விசாரணை கோரி பரம்பீர் சிங் உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறார்.