அழிவின் விளிம்பில் அரபு அரசர்களின் பாலுணர்வு பறவை… ‘ஹவுபாரா பஸ்டார்ட்’!

Read Time:7 Minute, 29 Second

‘ஹவுபாரா பஸ்டார்ட்’ என்பது ஆண்டு தோறும் குளிர்காலத்தில் (நவம்பர்- பிப்ரவரி) மத்திய ஆசியாவில் இருந்து பாகிஸ்தான் பாலைவனத்திற்கு படையெடுக்கும் பறவையாகும்.

பூர்வீக அடிப்படையில் இதில் ஆசிய மற்றும் வட ஆப்பிரிக்க ஹவுபாராக்கள் என இரு இனங்கள் காணப்படுகிறது. எளிதாக சொல்லப்போனால் வெண் கழுத்து ராஜாளியாகும் (கழுகு).

பெரும்பாலும் சாம்பல், கருப்பு நிறத்தில் காணப்படும் இவை இயற்கையாகவே மேலும் சில வண்ணங்களை சிறகுகளில் கொண்டிருக்கிறது. கம்பீரமான தோற்றம் கொண்டிருக்கும் இப்பறவைகள் பாலை வனங்களில் பட்டுப்போன புற்களுக்கு மத்தியில் உயிர் வாழ்பவையாகும். பார்க்கையில் அச்சமூட்டும் இப்பறவைகள் 2, 3 முட்டையிட்டு 25 நாட்கள் வரையில் அடைகாத்து குஞ்சுகளை பொறிக்கச் செய்து வளர்க்கும் பறவையினமாக இருக்கிறது.

ஒரு குஞ்சு நன்கு பறக்க கற்று வானில் வட்டமிட வேண்டும் என்றால் குறைந்தது 4 மாதங்கள் வரையில் எடுக்கும் எனக் கூறப்படுகிறது. இப்போது உலகில் அழிந்துவரும் இனங்களில் ஒன்றாகும்.

ஆசிய ஹவுபாராக்களின் வாழ்விடம் என்பது வடகிழக்கு ஆசியாவிலிருந்து, மத்திய ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் அரேபிய தீபகற்பம் முழுவதும் சினாய் பாலைவனம் வரையில் பரவிகிடக்கிறது. ஹவுபரா பாதுகாப்புக்கான சர்வதேச நிதியத்தின் (ஐ.எஃப்.எச்.சி) கருத்துப்படி, தற்போது சுமார் 33,000 ஆசிய ஹவுபராக்களும், 22,000-க்கும் மேற்பட்ட வட ஆபிரிக்க ஹவுபராக்களும் உள்ளன.

வசந்த காலத்தில் இனப்பெருக்கம் செய்த பின்னர் குளிர்காலத்தை கழிக்க தெற்கு நோக்கும் ஆசிய ஹவுபாராக்கள் முக்கியமாக செல்வது பாகிஸ்தானாக இருக்கிறது. ஈரான், துர்க்மெனிஸ்தான் உள்ளிட்ட சில பகுதிகளில் வாழும் அவை அங்கும் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த காலக்கட்டங்களில்தான் இப்பறவைகள் வேட்டையாடப்படும் அதிக ஆபத்தை கொண்டிருக்கின்றன.

ஐ.எஃப்.எச்.சி கூற்றுப்படி ஹவுபாராக்களின் எண்ணிக்கை வீழ்ச்சிக்கான முக்கிய காரணம் வேட்டையாடுதல் இருக்கிறது. இவைகளின் இயற்கையான வாழ்விடங்கள் சீரழிக்கப்படுவது மற்றொரு காரணமாக இருக்கிறது. பாகிஸ்தானை பொறுத்தமட்டில் இப்பறவைகளை பாகிஸ்தானியர்கள் வேட்டையாட அனுமதி கிடையாது. ஆனால், அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் அதை வேட்டையாட அரபு மன்னர் குடும்பங்களையும், அபுதாபி, கத்தார், பக்ரைன், துபாய், சவுதி அரேபியா செல்வந்தர்களையும அழைக்கிறது.

இந்த பறவைகளை அரபு மன்னர்கள் வேட்டையாட முக்கிய காரணமாக இருப்பது, இவற்றை சாப்பிடுவதால் பாலியல் உணர்வு அதிகரிக்கும், அதற்கான சக்தியும் அதிகரிக்கும் என்பதாக இருக்கிறது. நாடு தாண்டிவரும் அரபு ஷேக்குகள் பாகிஸ்தான் பாலைவனங்களில் முற்றுகையிட்டு இந்த பறவைகளை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வேட்டையாடல் என்பது ஏதோ ஒரு பறவை வேட்டையாடப்படுவதில்லை…

சுமார் 10 நாட்கள் வேட்டையாட அனுமதிபெறும் ஷேக்குகள் தங்களுடைய ஆசைதீர பறவைகளை கொன்று குவிக்கிறார்கள். அரசு அனுமதி வழங்குவது 100 பறவைகளுக்கு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதற்கு மேல் வேட்டையாட வேண்டும் என்றாலும் அனுமதியை கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையும் அங்கு இருக்கிறது. பாவப்பட்ட பறவைக்கு அது தெரியாது குளிர்காலம் கொண்டாட வந்து குடும்பமாக பாலியல் இறைச்சியாகுகின்றன.

2015-ல் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இந்த பறவைகளை வேட்டையாட தடை விதித்துள்ளது. ஆனால் தடை வெறும் காகித அளவிலே உள்ளது. அப்பறவைகளை வேட்டையாட செல்வந்தர்களுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை சிறப்பு அனுமதியை வழங்குகிறது. உள்ளூர் முதல் உலக சுற்றுசூழல் ஆர்வலர்கள் வரையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டாலும் பாகிஸ்தான் தொடர்ந்து அனுமதியை வழங்கி வருகிறது.

2014 ஆம் ஆண்டில் 21 நாள் வேட்டையாடிய சவுதி இளவரசர் 2,000-க்கும் மேற்பட்ட பறவைகளை கொன்றதாக அதிகாரப்பூர்வ அறிக்கை கசிந்தது.

ஹவுபாரா பறவையின் இறைச்சி, சின்றின்பத்தை தூண்ட வல்லது. இதன் இறைச்சியை அரபு நாட்டவர், குறிப்பாக அரச குடும்பத்தினர் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதற்காக அவர்கள், இந்த பறவையை வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர் எனக் கூறும் உள்ளூர் அதிகாரிகள், ஷேக்குகளின் வரவுக்காக ஒவ்வொரு ஆண்டும் காத்திருக்கிறார்கள்.

உச்சநீதிமன்றம் தடை விதித்தும் பாகிஸ்தான் அரசு சிறப்பு அனுமதியை வழங்குவது ஏன்? என்ற கேள்வி எழலாம்… பறவைகளை வேட்டையாட தடை விதிக்கும் பட்சத்தில், அரபு நாட்டிடமிருந்து கிடைக்கக்கூடிய நிதியுதவிகள் நிறுத்தப்படலாம் என்ற அச்சமே அதற்கு காரணமாக இருக்கிறது. அவர்களை பகைத்து கொள்ள விரும்பவில்லை எனக் கூறும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை குறைந்த அளவில் வேட்டையாடும் படி அறிவுறுத்துகிறோம் எனக் கூறுகிறது.

பாகிஸ்தானில் தற்போதைய பிரதமர் இம்ரான்கான் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது, இந்த பறவைகளை வேட்டையாட அனுமதிப்பதை கடுமையாக விமர்சித்து இருந்தார். தற்போது அவரே, அரசு அரச குடும்பத்தினருக்கு வரவேற்பு அளித்து வருகிறார். அங்கு இளவரசர்களின் பாலியல் இயக்கத்திற்கு உணவளிக்க அரிய பறவை தொடர்ந்து வேட்டையாடுகிறது…

அரபு நாடுகளில் ஹவுபாராக்கள் ஒரு சண்டை சேவலை போன்றும் வளர்க்கப்படுகிறது. இந்த பறவைகளுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்து வளர்க்கும் செல்வந்தர்கள் பாலைவனங்களில் அவ்வப்போது இரு ஹவுபாராக்களுக்கு இடையே சண்டையையும் நடத்துகிறார்கள்… வானில் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் இரண்டு ஹவுபாராக்களில் ஒன்று உயிரிழக்கும் வரையில் மோதல் தொடரும்… மிகவும் அரிதான பறவை வேட்டைக்காரர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது.