இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான தடையை பாகிஸ்தான் நீக்கியது ஏன்…?

Read Time:11 Minute, 27 Second

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் எப்போதும் அரசியலுடன் இணைக்கப்பட்டுள்ளது. உரி பயங்கரவாத தாக்குதல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதல் ஆகிய சம்பவங்களுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 16 சதவீதம் குறைந்தது. பாகிஸ்தானுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 2015-16 ஆம் ஆண்டில் 2.17 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது 2016-17-ல் 16 சதவீதம் குறைந்து 1.82 பில்லியன் டாலராக இருந்தது.

தொடர்ச்சியான பதட்டங்கள் இருந்தபோதிலும், அடுத்த ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் ஓரளவு வளர்ந்தது; இந்திய ஏற்றுமதிகள் 2017-18 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 6 சதவீதம் உயர்ந்து 1.92 பில்லியன் டாலராகவும், பின்னர் சுமார் 7 சதவீதம் அதிகரித்து 2018-19-ல் 2.07 பில்லியன் டாலராகவும் இருந்தது. பாகிஸ்தானில் இருந்து இந்தியா இறக்குமதி செய்வது குறைவாகும். இருப்பினும் இந்த காலகட்டங்களில் 7.5 சதவீதம் அதிகரித்தது. 2016-17ல் இந்தியாவின் இறக்குமதி 454.49 மில்லியன் டாலர்களாக இருந்த நிலையில் 2017-18 -ல் 488.56 மில்லியன் டாலராக அதிகரித்தது.

2019-ல் அரசியல் உறவுகள் முடங்குவதற்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியின் வளர்ச்சி 2018-19ல் சுமார் 494.87 மில்லியன் டாலராக இருந்தது.

பல ஆண்டுகளாக இந்தியா பாகிஸ்தானுடன் வர்த்தக உபரி உள்ளது, ஏற்றுமதியை விட மிகக் குறைந்த இறக்குமதியை கொண்டுள்ளது. 2018-19 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் 50 வர்த்தக நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் இருந்தது. ஆனால் 2019-20 ஆம் ஆண்டில் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டது. நாடுகளுக்கிடையேயான வர்த்தக தடை பாகிஸ்தானை மேலும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் பாகிஸ்தான் தன்னுடைய ஜவுளி மற்றும் மருந்துத் தொழில்களுக்கான முக்கிய மூலப்பொருட்களுக்காக இந்தியாவை பெரிதும் நம்பியிருந்தது.

2018-19 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பெருமளவு பருத்தி (50 550.33 மில்லியன் டாலர்) மற்றும் கரிம வேதிப்பொருட்கள் (7 457.75 மில்லியன் டாலர்) இறக்குமதி செய்திருந்தது. அந்த ஆண்டு இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் இறக்குமதி செய்த பிற முக்கிய பொருட்கள் பிளாஸ்டிக் (1 131.19 மில்லியன் டாலர்), தோல் பதனிடுதல் / சாயமிடுதல் சாறுகள் (114.48 மில்லியன் டாலர்) மற்றும் அணு உலைகள், கொதிகலன்கள், இயந்திரங்கள் மற்றும் இயந்திர சாதனங்கள் (94.88 மில்லியன் டாலர்) ஆகியவை ஆகும்.

தடை அறிவிப்புக்கு பின்னர் இறக்குமதி கடுமையாக சரிந்தது. அதே நேரத்தில் பருத்தி இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்பட்டது. கொரோனா தொற்றின் போது போதிய அளவு மருந்துகளை வழங்குவதை உறுதி செய்வதற்காக பாகிஸ்தான் இதுவரை 67.26 மில்லியன் டாலர் மதிப்புள்ள மருந்துப் பொருட்களையும், 115 மில்லியன் டாலர் மதிப்புள்ள கரிம வேதிப்பொருட்களையும் இறக்குமதி செய்துள்ளது.

2018-19ல் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் முக்கிய இறக்குமதிகள் கனிம எரிபொருள்கள் மற்றும் எண்ணெய்கள் (1 131.29 மில்லியன் டாலர்கள்), உண்ணக்கூடிய பழங்கள் மற்றும் கொட்டைகள் (103.27 மில்லியன் டாலர்), உப்பு, கந்தகம், கல் மற்றும் ப்ளாஸ்டெரிங் பொருட்கள் (92.84 மில்லியன் டாலர்), தாதுக்கள், கசடு மற்றும் சாம்பல் (17.18 மில்லியன் டாலர்) மற்றும் தோல் (16.27 மில்லியன் டாலர்) ஆகும்.

ஆகஸ்ட் 2019 இல் இந்தியாவுடனான இருதரப்பு வர்த்தகத்தை பாகிஸ்தான் அரசு நிறுத்துவதாக அறிவித்தது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு நீக்கியதை அடுத்து இந்நடவடிக்கையை மேற்கொண்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கான இந்தியாவின் ஏற்றுமதி கிட்டத்தட்ட 60.5 சதவீதம் குறைந்து 816.62 மில்லியன் டாலராக இருந்தது. மேலும், இறக்குமதி 97 சதவீதம் சரிந்து 2019-20-ல் 13.97 மில்லியன் டாலராக இருந்தது.

இப்போது வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவதற்கான காரணம் என்ன?

2 ஆண்டுகள் வணிக உறவுகளை முறித்த பகிஸ்தான், இந்தியாவில் இருந்து சர்க்கரை, பருத்தி இறக்குமதி செய்வதை பாகிஸ்தான் அனுமதித்துள்ளது.

பருத்தி இறக்குமதி மீதான தடையை நீக்குவதற்கான பாகிஸ்தான் முடிவு பாகிஸ்தானின் ஜவுளி துறைக்கு மூலப்பொருட்களின் பற்றாக்குறை பின்னணியாக உள்ளது. பாகிஸ்தானில் பருத்தியின் உள்நாட்டு மகசூல் குறைவாக இருப்பதால் ஜவுளிதுறை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது விலை உயர்வு மற்றும் கால நேரம் அதிகரிப்பு சூழல் ஏற்படும். இதுபோன்று பாகிஸ்தானில் சர்க்கரையின் விலையும் அதிகரித்துச் சென்றுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அமைச்சரவையின் பொருளாதார ஒருங்கிணைப்புக் குழு (ஈ.சி.சி) இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு பச்சை சமிக்ஞை கொடுத்துள்ளது. இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவுகளில் அண்மையில் ஏற்பட்ட தடையில் நேர்மறையாக பிரதிபலித்தது. ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் போர் நிறுத்தத்தை கடைபிடிக்க பாகிஸ்தான் முன்வந்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானால் நியமிக்கப்பட்ட பாகிஸ்தானின் நிதி மந்திரி ஹம்மத் அசார் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், இந்த நடவடிக்கை நாட்டிற்கு அதிகரித்து வரும் சர்க்கரை விலை மற்றும் பருத்தி பற்றாக்குறையை சமாளிக்க வழிவகை செய்யும் எனக் கூறியுள்ளார்.

தனியார் துறையினரால் 500,000 டன் வரை சர்க்கரை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்ததுடன், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஜூன் இறுதி வரை பருத்தி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

“சர்க்கரையின் விலை அதிகரித்ததை தொடர்ந்து, உலகெங்கிலும் இருந்து இறக்குமதியை நாங்கள் அனுமதித்தோம்; ஆனால் உலகம் முழுவதும் விலைகளும் அதிகமாக இருக்கிறது; அதாவது இறக்குமதி சாத்தியமில்லை என்ற நிலை ஏற்பட்டது; ஆனால் நமது அண்டை நாடான இந்தியாவில், சர்க்கரையின் விலை பாகிஸ்தானில் உள்ள விலையை விட குறைவாக உள்ளது ”என்று அசார் கூறியுள்ளார்.

“எனவே, இந்தியாவுடன் சர்க்கரை வர்த்தகத்தை அனுமதிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். தனியார் துறை மூலம் 500,000 டன் வரையில் இறக்குமதி செய்யப்படுகிறது,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி ஒரு சிறிய பற்றாக்குறையை ஈடுகட்டவும், விலைகளை குறைக்கவும் உதவும். “நன்மைகள் பாகிஸ்தானின் ஏழைகளுக்கு செல்லும்” என்றும் கூறியிருக்கிறார். காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை மீண்டும் தொடங்குவது குறித்த செய்தியாளர்கள் கேள்வியை புறக்கணித்திருக்கும் அவர், “சில நாடுகளுடன் வர்த்தகம் செய்வதன் மூலம் சாதாரண மனிதனின் சுமை குறைக்கப்பட்டால், அதில் எந்த இழப்பும் இல்லை.” எனக் கூறியிருக்கிறார்.

இந்திய தரப்பில் பாகிஸ்தானின் முடிவு பஞ்சாபில் விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் பயனளிக்கும். இது நீண்ட காலமாக அண்டை நாட்டோடு வர்த்தக உறவை கொண்டிருந்த மாநிலமாகும். காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற விவசாய பொருட்களின் முக்கிய ஆதாரமாகவும் இருந்தது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரிக்கும் போதெல்லாம் வர்த்தகம் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்த பின்னர், ஆகஸ்ட் 2019 இல் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக் குழு இந்தியாவுடனான வர்த்தக உறவை ஒருதலைப்பட்சமாக நிறுத்தியது. சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் கமர் பஜ்வா “கடந்த காலத்தை புதைத்து முன்னேற வேண்டும்” என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் உறவுகளை மேம்படுத்துவதற்கான முதல் படியை இந்தியா எடுக்க வேண்டும் என்று இம்ரான் கான் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 23 அன்று பாகிஸ்தான் தினத்தன்று இம்ரான் கானுக்கு அனுப்பிய செய்தியில், பயங்கரவாதம் இல்லாத சூழலுக்கும், இரு தரப்பினருக்கும் இடையிலான சிறந்த உறவுகளுக்கான நம்பிக்கையான சூழலுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் அமைதியான மற்றும் கூட்டுறவு உறவுகளை விரும்புகிறது என்று கூறியிருக்கிறார். இருப்பினும் இருநாட்டு உறவில் நேர்மறையான தாக்கம் போக போகதான் தெரியவரும்…