பிரிந்த தம்பதியர் சேர… காசிக்கும் மேலான ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி திருக்கோயில்!

Read Time:3 Minute, 53 Second

திருவாரூர் மாவட்டத்தில் கும்பகோணத்தை அடுத்துள்ள அழகிய கிராமம் ‘ஸ்ரீவாஞ்சியம்’. காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இவ்வூரின் நடுவே உள்ள ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி திருக்கோயில் காசிக்கு மேலான தலமாக போற்றப்படுகிறது.

வியாசர் அருளிய ஸ்காந்த புராணம், பிரம்மாண்ட புராணம் ஆகியவற்றில் இந்த தலத்தின் பெருமை சொல்லப்பட்டிருக்கிறது என்றால் கோவிலின் தொன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இங்கே சிவனாரின் திருநாமம் ஸ்ரீவாஞ்சிநாதர். அம்பாளின் பெயர் ஸ்ரீ மங்களாம்பிகை. இந்த தலத்தில் தேவர்களும் முனிவர்களும் கடும் தவமிருந்து சிவ பூஜை செய்திருக்கிறார்கள். தெய்வங்களே இங்கு வந்து, சிவபெருமானை நோக்கி தவம் மேற்கொண்டிருக்கிறார்கள்.

அவ்வளவு ஏன்… எமதருமருக்கு சிவனார் அருளிய பேறு பெற்ற திருத்தலம் இதுவாகும். ஆகவே இந்த தலத்தின் அம்மைக்கும் அப்பனுக்கும் வாகனத்தொண்டு செய்து வருகிறார். இதனால் எமதருமருக்கு இங்கு தனிச்சந்நிதியும் உள்ளது. இவரை வணங்கிய பிறகுதான் மூலவரை வழிபடுகின்றனர்.

காசியில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் ஸ்ரீவாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத்தலம், குழந்தைப் பேறு அருளும் சிறப்பு தலமாகும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி மற்றும் கண்டகச் சனி ஆகியவற்றுக்கான பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது.

குப்த கங்கை

இறைவன்- வாஞ்சிநாதேஸ்வரர், இறைவி- மங்களநாயகி. இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி செய்து வந்தால் நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களை செய்தால், பித்ரு தோஷ நிவர்த்தியாகும்.

ராகு-கேதுவை வழிபட்டு வந்தால், கால சர்ப்ப தோஷம் நீங்கும். இத்தலத்தில் ஓர் இரவு தங்கினாலே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும் என்று புராணங்கள் இத்தல சிறப்பை எடுத்துரைக்கின்றன. இங்குள்ள குப்த கங்கையில் நீராடி, இறைவனையும், அம்பாளையும், மகாலட்சுமியையும் வழிபட்டால், பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வார்கள் என்பது ஐதீகம்.

நால்வர் பெருமக்கள், அருணகிரிநாதர், வள்ளலார் பெருமான் ஆகியோரால் பாடல்கள் பெற்ற திருத்தலம் இது. இந்தத் தலத்துக்கு வந்து தரிசிக்கும் பாக்கியம் இருந்தால் தான் இங்கு வந்து தரிசிக்க முடியும் என்பது ஐதீகம்.

ஸ்ரீவாஞ்சியம் செல்லும் வழி

சென்னையில் இருந்து கும்பகோணம் செல்லவேண்டும், பின்பு அங்கிருந்து நன்னிலம் செல்லும் வழியில் அச்சுதமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கவேண்டும். தடம் எண்: 430 (கும்பக்கோணத்தில் இருந்து நன்னிலம் வழியாக நாகபட்டினம் செல்லும் பேருந்துகள்) தடம் எண்: 28, 335 (கும்பக்கோணத்தில் இருந்து நன்னிலம் செல்லும் பேருந்து)

ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி திருக்கோயில்
Google map: https://maps.app.goo.gl/bqDrXUk5R7b9A17u6