தைவானுக்கு இந்தியா நேசக்கரம்… ‘சீனாவின் நெருக்கடிக்கு மத்தியில் பராகுவேக்கு தடுப்பூசி’

Read Time:3 Minute, 28 Second

சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டுப் போருக்கு பிறகு தைவான் உருவானது.

இருப்பினும் தைவான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று சீனா கூறிவருகிறது. தேவைப்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்றும் மிரட்டி வருகிறது. ஆனால் தைவானோ, தனி அரசியலமைப்புச் சட்டம், ராணுவம், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்டிருப்பதால் தன்னை ஒரு தனி நாடாக பறைசாற்றி கொள்கிறது.

தைவானை எளிதில் வீழ்த்தக் கூடிய பிராந்தியமாகப் பார்க்கும் சீனா, பிற நாடுகள் தைவானுடன் நட்பு பாராட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

கொரோனா காலக்கட்டத்திலும் தைவானுக்கு நெருக்கடி கொடுக்க வளையமிட்டு வருகிறது.

சீனாவின் நெருக்கடி காரணமாக பெரும்பாலான உலக நாடுகள் தைவான சுதந்திர தேசமாக அங்கீகரிக்க தயங்குகின்றன. இருப்பினும் சில நாடுகள் தைவான சுதந்திர நாடாக அங்கீகரிக்கின்றன. அப்படியொரு நாடுகளில் ஒன்று தான் தென் அமெரிக்காவில் இருக்கும் பராகுவே. இப்போது பராகுவே கொரோனாவினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது…

இந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள துடிக்கும் சீனா, தைவானுடன் உறவை துண்டித்துக்கொண்டால் நாங்கள் தடுப்பூசியை வழங்குகிறோம் என பராகுவே நாட்டிற்கு அழுத்தம் கொடுத்துள்ளது. இதனை அறிந்த தைவான் அந்நாட்டிற்கு உதவ மற்ற ஜனநாயக நாடுகளுடன் இணைந்து கொரோனா தடுப்பூசிகளை பெற உதவியுள்ளது.

தைவானுடனான உறவுகளைத் துண்டிக்க பராகுவேவுக்கு அழுத்தம் கொடுக்க உயிர்க்காக்கும் தடுப்பூசிகளை கையில் ஆயுதமாக சீனா எடுத்துள்ளது என தைவான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் வு குற்றம் சாட்டியுள்ளார்.

“கடந்த சில வாரங்களாக நாங்கள் ஜப்பான், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுடன் பேசிவருகிறோம்… இந்தியாவால் அதிர்ஷ்டவசமாக பராகுவேவுக்கு சில கோவாக்சின் தடுப்பூசிகளை வழங்க முடிந்தது,” என்று ஜோசப் வு கூறியுள்ளார்.

இந்தியா ஏற்கனவே பராகுவேவுக்கு 100,000 தடுப்பூசிகளை அனுப்பியுள்ளது என்றும் மேலும் 100,000 தடுப்பூசிகளை அனுப்ப உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ள இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் 2022 இறுதிக்குள் ஆசிய நாடுகளுக்கு ஒரு பில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வழங்கி பணியாற்றி வருகின்றன. இந்திய அரசாங்கம் மார்ச் 26 அன்று பராகுவேவுக்கு 100,000 கோவாக்சின் தடுப்பூசிகளை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.