தமிழகத்தில் ஒரு கோடியே 71 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை…

Read Time:3 Minute, 50 Second

தமிழகத்தில் 16-வது சட்டமன்ற பொதுத்தேர்தல் 6-ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.

மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் வாக்களிக்க இருந்தனர்.

மொத்தமாக 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகின என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாவட்ட அளவில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்த அளவாக சென்னை மாவட்டத்தில் 59.06 சதவீதம் பதிவாகி உள்ளன. தொகுதி அளவில் அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீதமும், குறைந்த அளவாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீதமும் பதிவாகின.

பதிவான மொத்த வாக்கு சதவீதத்தை வைத்து பார்க்கும்போது, 4 கோடியே 57 லட்சம் பேர் மட்டுமே வாக்களித்து இருக்கின்றனர் என்றும் ஒரு கோடியே 71 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

கொரோனா பரவல் அச்சம், வாக்குப்பதிவு குறைந்ததற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 74.26 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. அதை வைத்து பார்க்கும்போது, இந்த முறை 1.48 சதவீத வாக்குகள் குறைவாகவே பதிவாகி உள்ளன.

தமிழக தேர்தலில் அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீதமும், குறைந்தபட்சமாக வில்லிவாக்கத்தில் 55.52 சதவீதமும் பதிவாகி உள்ளன. சோளிங்கரில் 80.01 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன 80 சதவீதத்துக்கும் மேல் 37 தொகுதிகளில் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. அதில் பாலக்கோடு (87.33 சதவீதம்), குளித்தலை (86.15), எடப்பாடி (85.6), வீரபாண்டி (85.53), ஒட்டன்சத்திரம் (85.09) ஆகியவை அடங்கும்.

132 தொகுதிகளில் 70 சதவீதம் முதல் 80 சதவீதத்துக்குள் வாக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னையில் குறைந்தபட்சமாக வில்லிவாக்கத்தில் 55.52 சதவீத வாக்குகள் பதிவாகின. அடுத்ததாக, தியாகராயநகர் (55.92), வேளச்சேரி (55.95), மயிலாப்பூர் (56.59), அண்ணாநகர் (57.02) ஆகிய தொகுதிகள் வருகின்றன. 15 தொகுதிகளில் 55 முதல் 60 சதவீதத்துக்குள் வாக்குகள் பதிவாகி உள்ளன. சென்னையில் வேலை பார்த்த பலரும் சொந்த ஊருக்கு திரும்பியதாலும் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

நட்சத்திர வேட்பாளர்களைக் கொண்ட தொகுதிகளை கவனித்தால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் அதிகபட்சமாக 85.60 வாக்குகள் பதிவாகி உள்ளன.

அடுத்ததாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்ட போடி (73.65), முதல்-அமைச்சர் வேட்பாளரான தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் (60.52), அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிட்ட கோவில்பட்டி (67.43), நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்ட திருவொற்றியூர் (65), மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு (60.72) வாக்குகள் பதிவாகி உள்ளன.