15-ந்தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம்

Read Time:2 Minute, 26 Second

தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மீன் உள்ளிட்ட கடல் உயிரிகளின் இனப்பெருக்க காலமாக மத்திய வேளாண் அமைச்சகம் கண்டறிந்துள்ளது. இந்த காலத்தில் மீன்கள் ஆழ்கடலில் முட்டையிட்டு, குஞ்சு பொரித்து இனவிருத்தி செய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால், கடலில்மீன் வளத்தை பெருக்கும் நோக்கத்தில், இக்காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக கிழக்கு கடற்கரை பகுதிகளில் 45 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 61 நாட்களாக அதிகரிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் வருகிற ஏப்ரல் 15-ந்தேதி தொடங்குகிறது.

கடலுக்கு படகுகளுடன் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் அனைவரும் வருகிற 14-ந்தேதி இரவுக்குள் கரை திரும்ப வேண்டும்.தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை 591 மீன்பிடி கிராமங்கள் உள்ளன. சென்னை காசிமேடு, கடலூர், நாகை, ராமேசுவரம், தூத்துக்குடி, முட்டம் உள்பட துறைமுகங்களில் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த படகுகள் அனைத்தும் கரையோரம் நிறுத்தப்படும். தடைக்காலத்தை மீனவர்கள் தங்களது படகுகளை பராமரிப்பது, மீன்வலைகளை பின்னுவது போன்ற பணிகளை மேற்கொள்ள பயன்படுத்திக்கொள்வார்கள். மீன்பிடி தடை காரணமாக தமிழகத்தில் மீன்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.