வாக்கு எண்ணும் மையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த தி.மு.க. ஒன்றிய செயலாளர்

Read Time:1 Minute, 37 Second

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் மே 2-ந் தேதி நடக்கிறது.

3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ள வாக்கு எண்ணும் மையத்தை அரசியல் கட்சி பிரமுகர்கள் சென்று பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராணி, வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது ஜோலார்பேட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தேவராஜின் உறவினரும், முன்னாள் ஒன்றிய தி.முக செயலாளருமான அசோகன் மற்றும் தண்டபாணி ஆகியோர் அடிக்கடி மையத்திற்குள் சென்று வந்ததாக தெரிகிறது. இதனை சப்-இன்ஸ்பெக்டர் ராணி கண்டித்துள்ளார். இதனால் அசோகன், தண்டபாணி இருவரும் சப்-இன்ஸ்பெக்டர் ராணியை ஒருமையில் பேசியுள்ளனர். இன்னும் 2 நாட்களில் உன்னை தூக்கிவிடுவேன் என அவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி ராணி அளித்த புகாரின்பேரில் அசோகன் மற்றும் தண்டபாணி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.