முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சி… உணவு தேடி இடம்பெயரும் வனவிலங்குகள்

Read Time:3 Minute, 55 Second

முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சியால் உணவு தேடி வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன.

தமிழகத்தில் உள்ள புலிகள் காப்பகங்களில் முதுமலை முக்கியமானதாக திகழ்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகள், சிறுத்தைப்புலிகள், காட்டுயானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மேலும் அரிய வகை தாவரங்களும், மரங்களும் உள்ளன. இங்கு வனவிலங்குகள் வாழ ஏற்ற கால நிலை, உணவு, தண்ணீர் இருப்பதால், அவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தொடர்ந்து மழை பெய்வது வழக்கம்.

அப்போது வனப்பகுதி பச்சை பசேல் என காட்சியளிக்கும். ஆனால் நவம்பர் மாதம் முதல் மே மாதம் வரை பனி மற்றும் கோடை காலமாக இருப்பதால், வனப்பகுதி வறட்சியை சந்திக்கிறது. குறிப்பாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வனப்பகுதி கடும் வறட்சியை சந்திக்கும். அப்போது வனவிலங்குகளும் உணவு மற்றும் தண்ணீரை தேடி அலைந்து திரிவதை பார்க்க முடியும்.

இந்த நிலையில் முதுமலை வனப்பகுதியில் தற்போது வறட்சி தொடங்கி உள்ளது. மேலும் நீர்நிலைகளும் வறண்டு வருவதால், வனவிலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இது தவிர பசுந்தீவன தட்டுப்பாடும் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் வனப்பகுதியில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் அலைந்து திரிகின்றன.

இதற்கிடையில் நிலம்பூர், முத்தங்கா, கூடலூர், முதுமலை, பந்திப்பூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் ஒவ்வொரு காலகட்டங்களில் நிலவும் காலநிலைகளுக்கு ஏற்ப காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இடம்பெயர்ந்து செல்கிறது.

தற்போது கூடலூர், முதுமலை பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் மாயாறு, பாண்டியாறு உள்பட அனைத்து நீர்நிலைகளும் வறண்டு காணப்படுகிறது. மேலும் பசுந்தீவன தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது.

இதைத்தொடர்ந்து முதுமலையில் இருந்து அதிகளவில் காட்டு யானைகள் வெளியேறி கூடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. வறட்சியான காலநிலையை போக்கும் வகையில் கோடை மழை பெய்யும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் இதுவரை மழை பெய்யவில்லை. இதனால் வறட்சியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

ஏற்கனவே உணவு தட்டுப்பாட்டால் அவதிப்படும் காட்டுயானைகள் உடல்ரீதியாக மெலிந்து வருகிறது. மேலும் உணவு தேடி பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறது. குறிப்பாக கர்நாடக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு தேடி கூடலூர், கேரள வனப்பகுதிக்கு வனவிலங்குகள் இடம்பெயர்கிறது.

முதுமலையில் வனவிலங்குகளின் தாகத்தை தணிக்க வாகனங்களில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வனப்பகுதியில் உள்ள தரைத்தள தொட்டிகளில் ஊற்றப்பட்டு வருகிறது.