கொரோனா அதிகரிப்பு எதிரொலி: ‘ரெம்டெசிவிர்’ மருந்து ஏற்றுமதிக்கு இந்தியா அரசு தடை.!

Read Time:3 Minute, 35 Second

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வீரியமாக பரவி வருகிறது.

இந்த கொரோனா நோயாளிகளுக்கு பல்வேறு விதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதில் ‘ரெம்டெசிவிர்’ எனப்படும் வைரஸ் தடுப்பு (ஆன்டிவைரல்) ஊசியும் நோயாளிகளுக்கு போடப்படுகிறது.

அமெரிக்காவின் ஜிலீட் சயீன்சஸ் கண்டுபிடித்த இந்த மருந்து மனித உடலில் கொரோனா வைரஸ் எண்ணிக்கையை அதிகரிப்பதை கட்டுப்படுத்துகிறது.

நரம்பு வழியாக செலுத்தப்படும் இந்த ஊசி மருந்து மனித செல்களில் வைரஸின் ஆர்.என்.ஏ.வை செயல் இழக்கச் செய்கிறது. அப்போது பிற உயிர்காக்கும் மருந்துகளுடன் சிகிச்சை அளிக்கும் போது நோயாளிகள் குணம் அடைகிறார்கள்.

தற்போது நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருவதால் இந்த ஊசிமருந்தின் தேவை அதிகரித்து வருகிறது.

இது வருகிற நாட்களில் இன்னும் அதிகரித்து மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் வரும் நிலையும் ஏற்பட்டு உள்ளது.

எனவே நாட்டில் கொரோனா சூழல் மேம்படும் வரை வெளிநாடுகளுக்கு இந்த தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து உள்ளது. மேலும், இந்த ஊசிமருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமின்றி இந்த மருந்து தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களையும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி இந்த மருந்து எளிதில் கிடைக்கும் வகையில், அது தொடர்பான இருப்பு நிலைகள் குறித்து அனைத்து உள்ளூர் தயாரிப்பு நிறுவனங்களும், வினியோகிஸ்தர்களும் தங்கள் இணையதளத்தில் தகவல்களை வெளியிட வேண்டும். அத்துடன் சட்ட விரோதமான பதுக்கல், கள்ளச்சந்தையில் விற்பனை போன்றவற்றை தடுப்பதற்காக மருந்து ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து முறைகேடுகளை தடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

மாநில சுகாதார செயலாளர்கள் மருந்து ஆய்வாளர்களுடன் இணைந்து அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

நாட்டில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருந்துத்துறை அதிகாரிகள் உள்ளூர் உற்பத்தியாளர்களை தொடர்பு கொண்டு ரெம்டெசிவிர் தயாரிப்பை அதிகரிக்க கேட்டுக்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவின் ஜிலீட் சயீன்சஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இந்தியாவில் 7 நிறுவனங்கள் இந்த ரெம்டெசிவிர் ஊசி மருந்தை தயாரித்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் மாதத்துக்கு 38.80 லட்சம் யூனிட் மருந்துகள் தயாரிக்கும் திறன் வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.