அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மழைநீர் புகுந்து ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் சேதம்

Read Time:2 Minute, 12 Second

அறந்தாங்கி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழைநீர் புகுந்ததால் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்தன.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்துள்ளது வல்லவாரி கிராம பகுதிகளில் பல ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் வல்லவாரி கிராமத்தில் உள்ள கடைத்தெருவில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

அறுவடை சமயங்களில் இப்பகுதி விவசாயிகளிடம் இருந்து அரசால் நெல்கொள்முதல் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

இப்பகுதி விவசாயிகளிடம் இருந்து தேர்தலுக்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்ட பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சாலையோரத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

தற்போது, கோடை வெயில் அதிகம் இருப்பதால், மழைபெய்யாது என நினைத்து ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் திறந்த வெளியில் வைக்கப்பட்டு இருந்தன.

குறிப்பிட்ட சில மூட்டைகளை மட்டும் தார்ப்பாயால் மூடி இருந்தனர். இந்தநிலையில் நேற்று காலை முதல் அறந்தாங்கி பகுதியில் பலத்த மழை பெய்தது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் ஆங்காங்கே மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் மழைநீர் புகுந்ததால் திறந்த வெளியில் இருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன. பல நெல்மூட்டைகள் முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கி சேதம் அடைந்தன. இதற்கிட்டையே அதிகாரிகள் அந்த மூட்டைகளை பாதுகாக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.