சித்திரை மாதத்தின் சிறப்புகள்…

Read Time:5 Minute, 48 Second

சித்திரை மாதத்தில் பல சிறப்பு மிக்க ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக புராணங்களும், இதிகாசங்களும் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான ஆலயங்களில், சித்திரை மாதத்தில்தான் ‘சித்திரைப் பெருவிழா’ என்ற பெயரில் திருவிழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.

 • சித்திரை மாதம் திருதியை அன்று மகாவிஷ்ணு மச்ச (மீன்) அவதாரம் எடுத்தார். அன்றைய தினம் ‘மத்ஸ்ப ஜெயந்தி’யாகக் கொண்டாடப்படுகிறது.
 • சித்திரை மாதத்தின் முதல் நாள்தான், பூமியை பிரம்மன் படைத்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
 • சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் பார்வதியை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
 • சித்ரா பவுர்ணமி அன்று, நெய்தீபம் ஏற்றிவைத்து குபேரனையும், அவரது மனைவி சித்ராதேவியையும் வழிபட்டால் செல்வம் சேரும். சித்ரகுப்தனை வழிபட்டால், புண்ணியம் சேரும்.
 • சித்திரை மாத பரணி நட்சத்திரத்தில் பைரவரை நினைத்து விரதம் இருந்தால் காரிய தடை நீங்கும்.
 • சித்திரை மாத மூல நட்சத்திரம் அன்று, லட்சுமி நாராயணரை வணங்கினால் நினைத்தது நடக்கும்.
 • சித்திரை மாத வளர்பிறை திருதியை அன்று, அட்சய திருதியை வருகிறது. இந்த நாளில் சிறிதளவு பொன் அல்லது உப்பு வாங்கினால் செல்வம் பெருகும்.
 • சித்திரை முதல்நாள் திருச்செந்தூர் முருகன் கோவிலில், அன்னாபிஷேகம் நடைபெறும்.
 • சித்திரை மாத சுக்லபட்ச அஷ்டமியில், அம்பிகை பிறந்ததாகக் கூறப்படுகிறது. அன்றைய தினம் புனித நதிகளில் நீராடுவது சிறப்பான பலனைத் தரும்.

*சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமி தினத்தில் லட்சுமிதேவி, வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு விஜயம் செய்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. எனவே அன்றைய தினம் லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

 • சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தில்தான் சித்திரகுப்தர் தோன்றினார். ஒரு முறை சிவபெருமான் ஒரு சித்திரம் வரைந்தார். அந்த ஓவியம் உயிர்ப்பெற்று வந்தது. அவரே சித்திரகுப்தர். இவரை உயிர்கள் செய்யும் பாவ- புண்ணிய கணக்குகளை எழுதுவதற்காக எமதர்மனுக்கு உதவியாளராக சிவ பெருமான் நியமித்தார். இவர் எமதர்மனின் கணக்கராக இருந்து, பாவ- புண்ணிய கணக்குகளை எழுதி வருவதாக இதிகாச, புராணங்கள் கூறுகின்றன.
 • சித்திரை மாத பவுர்ணமியில் தான், கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

மஞ்சள் நீராட்டு

சித்திரை மாதத்திற்கு ‘சைத்ர மாதம்’ என்ற பெயரும் உண்டு. சைத்ர மகரிஷி பிறந்த மாதம் என்பதால் இந்தப் பெயர் வந்தது. மிகவும் புண்ணிய மாதமான சித்திரை, அம்மனுக்கு உகந்தது. எனவே தான் இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் விழா எடுக்கப்படுகிறது. இந்த காலத்தில் அக்னி நட்சத்திரம் உச்சத்தில் இருப்பதால், வெயில் கூடுதலாக இருக்கும். அதன் தாக்கத்தில் இருந்து நம்மை குளிர்ச்சி அடையச் செய்வதற்காக இவ்விழாவின்போது மஞ்சள் நீராட்டு விழா நடத்துகின்றனர்.

சந்திரன் வழிபாடு

சித்ரா பவுர்ணமி தினத்தன்று இரவில் பெண்கள் சுமங்கலி பூஜை செய்தால், என்றும் நித்ய கல்யாணியாக (தீர்க்க சுமங்கலி) இருப்பர் என்பது ஐதீகம். அன்று இரவில் தம்பதியர் பரிபூரணமாக பிரகாசிக்கும் சந்திரனைப் பார்த்து, களங்கம் இல்லாத வாழ்வு கிடைக்க வேண்டினால் குடும்பம் சிறப்பாக இருக்கும்.

கிரிவல நாள்

சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி மிகவும் பிரசித்தி பெற்றது, சக்தி வாய்ந்தது.

எனவே அன்றைய தினம் சத்யநாராயணர் மற்றும் சித்ரகுப்தரை வழிபடுவது மிகவும் விசேஷமான பலன்களைத் தரும். இந்நாளில் கிரிவலம் வருவதால் உடலுக்கு புதுத்தெம்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக அருணாச்சலம் அருளும் திருவண்ணாமலை கிரிவலம் வாழ்வில் பல நன்மைகளை வழங்கும்.

குபேரனுக்கு உகந்த நாட்கள்

சித்திரை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் குபேரனுக்கு உகந்த நாட்களாகும்.

இந்த நாட்களில் 108 தங்கம் அல்லது வெள்ளிக்காசுகளால் மகாலட்சுமியை அர்ச்சித்து ‘லட்சுமி குபேர பூஜை’ செய்தால் வாழ்விற்குத் தேவையான அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். ஆனால் எல்லோருக்கும் அந்த பாக்கியத்தை பகவான் கொடுப்பதில்லை. எனவே வசதி இல்லாதவர்கள் தங்க காசுகளுக்கு பதிலாக 108 பூக்களால் பூஜித்தாலே போதும் அந்த பலன் கிடைத்து விடும்.