ஆனந்த வாழ்வருளும் ‘பிலவ’ சித்திரை வருடப்பிறப்பு..!

Read Time:3 Minute, 50 Second

உலகத்தின் இயக்கம் 9 கோள்களை கொண்டே நடைபெறுகிறது. இந்த நவ கோள்களில் தலைமை கோளாக இருப்பது சூரியன். சூரியன் ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் உதயமாகி, பங்குனி வரை 12 ராசிகளிலும் சஞ்சரித்து, மறுபடியும் சித்திரையில் மேஷ ராசியில் உதயமாகும்.

இப்படி சூரியன் மேஷராசியில் பயணிக்க தொடங்கும் நாளே ‘சித்திரை வருடப்பிறப்பு’ என்று அழைக்கப்படுகிறது.

தமிழக மக்களின் பண்டிகைகளில் முக்கியமானது சித்திரை வருடப்பிறப்பு ஆகும். இந்துக்களின் முக்கிய பண்டிகையாகவும் இது இருக்கிறது. சித்திரை வருடப்பிறப்பானது, ‘சித்திரை விஷூ’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் முக்கியமான ஒரு நிகழ்வாகும். ‘விஷூ’ என்பதற்கு, இரவும் பகலும் சமமானது என்று பொருளாகும்.

இந்த தினத்தில் இறைவனை மனம், மெய் ஆகியவற்றால் வணங்கி துதித்தால், அந்த ஆண்டு முழுவதும் நமக்கு முன் வரும் துன்பங்கள், வினைகள் அனைத்தும் அகன்று போகும் என்பது நம்பிக்கை.

நாம் முன்னெடுக்கும் எந்த நல்ல காரியமும் தங்கு தடையின்றி நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும்.

இது தவிர லட்சுமி கடாட்சமும், பிறவி துன்ப நீக்கமும், தெய்வ அனுக்கிரகமும் கிடைக்கும் என்று சான்றோர்கள் தெரிவித்து உள்ளனர்.

சித்திரை மாதத்தில் தான் முக்கனிகளில் ஒன்றான மாமரத்தில் பூக்கள் பூக்கத் தொடங்கும்.

அதே போல் இறைசக்தி கொண்டதாக கருதப்படும் வேப்ப மரத்திலும் பூக்கள் பூக்கத் தொடங்கும். இப்படி இனிப்பும், கசப்பும் கொண்ட மரங்களில் ஒரே நேரத்தில் பூக்கள் பூப்பது போலவே, மனித வாழ்விலும் இன்பமும், துன்பமும் இரண்டற கலந்து தான் வரும். அதை சந்தித்து சமாளிப்பதற்குத்தான் இறைவழிபாடு நமக்கு உதவி செய்கிறது.

சித்திரை வருடப்பிறப்பு நாளில், இறைவனை நம் மனதாலும், மெய்யாலும் வணங்கி துதித்தால், அந்த ஆண்டு முழுவதும் நமக்கு நன்மைகள் வந்து சேரும் என்பது நம்பிக்கை.

சித்திரை விஷூ நாளில், பலவகை மலர்கள், இலைகள், அருகு, மஞ்சள், பால் முதலானவை கொண்டு செய்யப்படும் ‘மருந்து நீர்’ தேய்த்து நீராட வேண்டும். பின்னர் ஆலயங்களுக்கு சென்று இறைவனை மனதார தொழுதல் வேண்டும். அத்துடன் தங்களால் இயன்ற தான தர்மங்களை செய்து, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவது ஒவ்வொருவரையும் வாழ்வாங்கு வாழச் செய்யும்.
மங்கலப் பொருட்கள் அணிந்து, இல்லங்களில் பொங்கல் வைத்து இறைவனுக்கு படைத்து, சூரிய நமஸ்காரம் செய்து பிரகாசம் நிறைந்த வாழ்வு வேண்டியும் வழிபாடு செய்யலாம்.

சித்திரை விஷூவை வரவேற்பவர்கள், முன்தினம் பூஜை அறையில் உள்ள தெய்வ உருவங்கள் கொண்ட படங்களுக்கு கீழ், தட்டில் பழங்களை அடுக்கி வைத்து விட்டு உறங்கச் செல்ல வேண்டும். பின்னர் அதிகாலையில் அந்த பழங்களில் கண் விழிக்க வேண்டும். கனியில் கண்விழிப்பதன் காரணமாக, எப்போதும் கனியின் சுவை போன்று இனிப்பான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கையாகும்.