சிகரம் தொட்ட ‘சின்ன கலைவாணர்’ விவேக்…!

Read Time:4 Minute, 24 Second

தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை சிந்திக்கவும், சிரிக்கவும் செய்தவர் சின்னக் கலைவாணர் பத்மஸ்ரீ விவேக்.

1961-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி கோவில்பட்டி அருகே உள்ள பெருங்கோட்டூரை சேர்ந்த சிவ.அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தவர். இவருடைய முழுப் பெயர் விவேகானந்தன்.

மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் பி.காம் இளங்கலைப் பட்டம் முடித்தார். பின்னர் அதே துறையில் எம்.காம் முதுகலைப் பட்டமும் பெற்றார். சிறிது காலம் மதுரையில் தொலைபேசி ஆபரேட்டராக வேலை பார்த்தவர், சென்னைக்கு வந்து, டி.என்.பி.எஸ்.சி குரூப் நான்கு தேர்வில் வெற்றிப் பெற்று, தலைமை செயலகத்தில் ஜூனியர் உதவியாளராக பணியில் சேர்ந்தார்.

அப்போது நாடகங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் அறிமுகம் கிடைத்ததும் அவருடைய இயக்கத்தில் உருவான ‘மனதில் உறுதிவேண்டும்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். படத்தில் சுஹாசினியின் சகோதரராக சிறிய வேடத்தில் நடித்தார். அதன்பின்னர் சினிமாத்துறையில் தன்னுடைய நகைச்சுவைக்கென தனியிடத்தை ஏற்படுத்தியவர்.

59 வயதாகும் விவேக் நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து இருக்கிறார்.

திரைப்படங்களில் சீர்திருத்த கருத்துகளையும் பரப்பினார். இதனால் அவரை சின்ன கலைவாணர் என்று ரசிகர்கள் அழைத்தனர்.

அரசு துறையில் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை, சுய ஒழுக்கம் இல்லாமை, ஒடுக்குமுறை உள்ளிட்ட பல விஷயங்களை நகைச்சுவை விமர்சனங்களால் விளாசுவார். இவருடைய நகைச்சுவை காட்சிகள் மக்கள் மனங்களில் தாக்கத்தையும் ஏற்படுத்தின பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

சுற்று சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்ற சமூக சேவை பணிகளில் மிகுந்த ஆர்வம் காட்டியவர்.

மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் அமைப்பு மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்து அயராது பணியாற்றி வந்தார். இதுவரை பள்ளிகள், கல்லூரிகள், கிராமங்கள். சாலையோரங்களில் 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு இருக்கிறார்.

திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2006-ம் ஆண்டு தமிழக அரசின் கலைவாணர் விருதை வென்றார். 2009-ம் ஆண்டு நாட்டின் நான்காவது உயர்ந்த விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ விருது விவேக்குக்கு வழங்கி கௌரவித்தது இந்திய அரசாங்கம்.

நடிகர் விவேக்கின் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

அதில் நீங்கள் எங்களை விட்டுச் சென்று விட்டீர்கள் என்பதை நம்ப முடியவில்லை. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். பல தசாப்தங்களாக எங்களுக்குப் பொழுதுபோக்கை தந்திருக்கிறீர்கள். நீங்கள் விட்டுச் சென்ற உங்கள் படைப்புகள் என்றும் எங்களுடன் இருக்கும் எனக் கூறியுள்ளார். பலரும் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. சமூகம் ஒரு நல் மனிதரை இழந்துள்ளது…. அவருடைய மரணத்தை யாராலும் நம்ப முடியவில்லை…. அவருடைய கலை படைப்புகளாலும், நட்ட மரங்களாலும் என்றும் நம்முடைய மனதில் வாழ்ந்துக் கொண்டிருப்பார்….