கொரோனா வருவதை தடுப்பூசி தடுக்காது… மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன…?

Read Time:2 Minute, 45 Second

கொரோனா தடுப்பூசி தொற்றின் தீவிரத்தன்மையையும், உயிரிழப்பையும் குறைக்குமே தவிர கொரோனா வருவதை தடுக்காது என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி 2 தவணை போட்ட பிறகும் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக பல மாநிலங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலர் கொரோனாவுக்கு பலியாகி விட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால், தடுப்பூசியின் தடுப்பாற்றல் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இந்தநிலையில், இதற்கு நாடு முழுவதும் மருத்துவ நிபுணர்கள் கொரோனா தடுப்பூசி தொற்றின் தீவிரத்தன்மையையும், உயிரிழப்பையும் குறைக்குமே தவிர கொரோனா வருவதை தடுக்காது என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் சொல்வதாவது, கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. சிலர் தடுப்பூசி போட்டவுடன் தங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வந்து விட்டதாக நினைத்துக்கொண்டு, முக கவசம் அணியாமலும், சரியாக அணியாமலும் சுற்றுகிறார்கள்.

ஆனால், 2 தவணை தடுப்பூசி போட்ட பிறகுதான், ஆன்டி பாடி செயல்பட தொடங்கும். நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். கொரோனா வைரஸ், முதலில் சுவாசப்பாதையை தாக்குகிறது. பிறகு, நெஞ்சு பகுதியை தாக்குகிறது. எனவே, மூக்கையும், வாயையும் திறந்து வைத்திருந்தால், தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா தாக்க வாய்ப்பு உள்ளது.

3D Rendering,COVID-19 virus infection of human lungs

கொரோனா தடுப்பூசிகள், கொரோனா வராமல் தடுக்கக்கூடிய பாதுகாப்பு கவசமாக இருக்காது. ஆனால், தடுப்பூசி போட்டிருந்தால், கொரோனா தாக்கினாலும் அதன் தீவிரத்தன்மை குறைவாக இருக்கும். மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவாக இருக்கும். ஆஸ்பத்திாியில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள், 85 சதவீதம் குறைவாக இருக்கும். லேசான அறிகுறிகள்தான் காணப்படும்.

கொரோனா நமது உடலுக்குள் நுழைவதை முக கவசம்தான் தடுக்கும். தடுப்பூசி தடுக்காது. முக கவசம்தான் இப்போது நமக்கு சிறந்த தடுப்பு மருந்தாகும் எனக் கூறுகின்றனர்.