பர்கூர் மலைப்பகுதியில் பூத்து குலுங்கும் நீல நிற ஜரகண்டா பூக்கள்….

Read Time:1 Minute, 45 Second

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் யானை, சிறுத்தை, காட்டெருமை, மான், கரடி, செந்நாய், முள்ளம்பன்றி உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

அதுமட்டுமின்றி இந்த மலைப்பகுதியில் பல்வேறு வண்ணங்களில் பூத்து குலுங்கும் செடிகள் முதல் அரியவகை மரங்களும் பல உள்ளன.

அவைகள் கோடை காலம், குளிர் காலம், பனி காலம் என அந்தந்த பருவ கால நிலைக்கு ஏற்ப பூக்கள் பூத்து குலுங்குகின்றன.

இதில் பர்கூர் மலைப்பகுதியில் தேவர்மலையை அடுத்த ஒரு கோவில் அருகே மரம் ஒன்று உள்ளது. இந்த மரம் முழுவதும் நீல நிறத்தில் பூத்து குலுங்குகின்றன. இது ‘நீல ஜரகண்டா’ என்ற மரம் ஆகும், கோடை காலமான தற்போது இந்த மரத்தில் இலைகளே தெரியாத அளவுக்கு பூக்கள் மிகவும் அழகாக பூத்து குலுங்குவதை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ரசித்து பார்த்து சென்றனர்.

மேலும் அவர்கள் தங்களுடைய செல்போனில் படம் எடுத்தும் மகிழ்ந்து செல்கின்றனர்.

‘கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேவர்மலை கோவில் பகுதிக்கு சுற்றுலாவாக வந்த வெளிநாட்டு பயணி ஒருவர் மரக்கன்று ஒன்றை நட்டு சென்றார் என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். தற்போது பர்கூர் மலைப்பகுதியின் அழகை பறைசாற்றும் வகையில் இந்த மரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.