நிலக்கடலை மகசூலை அதிகரிக்க.. உருளை உருட்டும் முறை!

Read Time:3 Minute, 25 Second

மதுரை மாவட்டத்தில் உள்ள கொட்டாம்பட்டி பகுதியில் மானாவாரி பயிராக நிலக்கடலை, உளுந்து உள்ளிட்ட சிறுதானிய பயறு வகைகள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் பருவ மழையை நம்பியே விவசாய பணிகள் நடைபெறும் நிலையில் கடந்த ஆண்டு பருவமழை நன்கு பெய்து கண்மாய்கள் நிறைந்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதி விவசாயிகள் நிலக்கடலை இரு போக சாகுபடி செய்துள்ளனர்.

நிலக்கடலை சாகுபடியில் மகசூலை அதிகரிக்க உருளை உருட்டுதல் முறையை விவசாயிகள் கையாளுமாறு வேளாண்மைத்துறையினர் ஆலோசனை வழங்கி வருகிறார்.

உருளை உருட்டும் முறை

நிலக்கடலை சாகுபடியின் காலம் 105 நாட்களாக உள்ள நிலையில் பயிரிட்ட 50 நாட்களில் பூ பூத்தவுடன் இரும்பு அல்லது பிளாஸ்டிக் டிரம் (உருளை) மூலம் கடலை செடியின் மீது உருட்டுகின்றனர். அவ்வாறு உருட்டும் போது செடிகள் சாய்கின்றன. செடியில் உள்ள பூ மற்றும் அதன் சார்ந்த விழுதுகள் மீண்டும் மண்ணுக்குள் செல்கின்றன.

எப்போதும் போல வேரில் உண்டாகும் கடலைகளுடன் சேர்ந்து விழுதுகளும் மண்ணுக்குள் சென்று கூடுதல் நிலக்கடலைகளாக சாகுபடியாகும். இதனால் அதிக மகசூல் கிடைக்கப்பெறுகின்றன. உருளை உருட்டிய பிறகு கடலை செடிகளும் சேதம் அடையாமல் 2 நாட்களில் பொதுவான வளர்ச்சியை அடையும். தோராயமாக 1 ஏக்கர் நிலத்தில் சுமார் 600 கிலோ நிலக்கடலை வரை கிடைக்கும் நிலையில் இந்த புதுவித முயற்சியால் 50 முதல் 70 சதவீதம் வரை கூடுதலாக மகசூல் கிடைக்கும் என வேளாண்மை துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ஆண்மையை அதிகரிக்க “ஏழைகளின் முந்திரி” வேர்க்கடலை

வெற்றி கண்ட விவசாயிகள்

இந்த முறையை நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவு பயன்படுத்தி வெற்றிகண்ட நிலையில் புதுவித முயற்சியாக கொட்டாம்பட்டி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி ஆலோசனை வழங்கப்படுகிறது.

அதன்படி மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழுவினர் இந்த முறையை தற்போது கையாள தொடங்கியுள்ளனர். கொட்டாம்பட்டி அருகே உள்ள க.கல்லம்பட்டியை சேர்ந்த விவசாயி செல்லப்பாண்டியன் தனது 1 ஏக்கர் நிலத்தில் கோடை சாகுபடியாக நிலக்கடலை பயிரிட்ட நிலையில் தற்போது நிலக்கடலையில் உருளை உருட்டுதல் முறையை செய்து வருகின்றார்.

அதிக செலவில்லாத இந்த எளிய முறையை கையாண்டால் நிலக்கடலை விளைச்சலில் நன்கு பயன் கிடைக்கும் என கொட்டாம்பட்டி வேளாண்துறை உதவி இயக்குநர் மதுரைச்சாமி தெரிவித்துள்ளார்.