இந்தியாவுக்கு ஆக்சிஜன் அனுப்பும் உலக நாடுகள்…

Read Time:7 Minute, 21 Second

இந்தியாவில் கொரோனா தொடர்ந்து கோரத்தாண்டவமாடி வருகிறது.

இந்த கொடிய வைரஸ், உலகின் வேறு எந்த நாட்டைக்காட்டிலும் தற்போது இந்தியாவில் ஜெட் வேகத்தில் பரவிக்கொண்டிருக்கிறது. முதல் அலையில் 1 லட்சத்தையே எட்டிப்பிடித்து விடாத இந்த கொரோனா தொற்று, இரண்டாவது அலையில் 3 லட்சத்தை தாண்டி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

இந்தியாவில் தொடந்து 4-வது நாளாக தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது.

நாடு முழுவதும் புதிதாக 3 லட்சத்து 52 ஆயிரத்து 991 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரங்களில் கொரோனாவுக்கு 2 ஆயிரத்து 812 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் இந்தியாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 123 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரங்களில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 272 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து உள்ளனர்.

28 லட்சத்து 13 ஆயிரத்து 658 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 14 கோடியே 19 லட்சத்து 11 ஆயிரத்து 223 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக இந்தியா தொடர்கிறது.

இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் ரெம்டெசிவிர் மருந்துகள் மற்றும் ஆஜ்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. மருந்துகள், ஆக்சிஜன் கிடைக்காது நோயாளிகள் உயிரிழக்கும் அவலம் தொடர்கிறது. தலைநகர் டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்க தொழிற்சாலைகளுக்கான ஆக்சிஜன் வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளது. எந்நேரமும் ஆக்சிஜன் டேங்கர்கள் மருத்துவமனைகளுக்கும், உற்பத்தி மையங்களுக்கும் பயணித்த வண்ணம் உள்ளது.

இந்தியன் ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்கி ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு கிடைப்பதை உறுதி செய்து வருகிறது.

கொரோனா முதல் அலையை கட்டுப்படுத்திய இந்தியா, உலக நாடுகளுக்கு சிகிச்சை மருந்துகளையும், உபகரணங்களையும், தடுப்பூசிகளையும் வழங்கி உதவியது. ஆனால் தற்போது கொரோனா 2-வது அலையில் சிக்கி தவித்து வருகிறது.

இந்நிலையில் உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், சீனா ஆக்சிஜன் செறிவூட்டிகளை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளன. இதுபோன்று ஐரோப்பிய யூனியன், ரஷ்யா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா, சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், பாகிஸ்தான், பூடான் உள்ளிட்ட நாடுகளும் உதவ முன்வந்துள்ளன.

சிங்கப்பூர் அரசு 250 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள் உள்ளிட்ட மருத்துவப் பொருள்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. சிங்கப்பூரின் ஷாங்காய் விமான நிலையத்தில் இருந்து மருத்துவ பொருள்களை ஏற்றி வந்த விமானம் மும்பை விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து சேர்ந்தது. இந்தியாவுக்கு ஆக்சிஜன் டேங்கர்களையும் சிங்கப்பூர் வழங்கியுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பு மருந்து தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருள்களை இந்தியாவுக்கு அனுப்ப இருப்பதாக கூறியுள்ள அமெரிக்கா இந்தியாவுக்கு உதவி செய்வதில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளது. நியூயார்க்கின் கென்னெடி விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா அனுப்பிய 318 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள் டெல்லி வந்தது.

இந்தியாவின் கோரிக்கையை தொடர்ந்து அத்தியாவசிய மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் கூடிய விரைவில் அனுப்ப இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

300 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், 600 மருத்துவக் கருவிகள் ஆகியவற்றை இந்தியாவுக்கு அனுப்புவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறி உள்ளார். மேலும், கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

வரும் நாள்களில் ஆக்சிஜன் வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு அனுப்ப இருப்பதாக பிரான்ஸ் அதிபர் மக்ரோங் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவின் நிலை குறித்து கவலை தெரிவித்து உள்ள ஜெர்மன் பிரதமர் மெர்கல் அவசரகால உதவிகளை வழங்கப் போவதாகக் கூறி உள்ளார். ஆக்சிஜன் உற்பத்திக் கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு அனுப்ப ஜெர்மனி திட்டமிட்டிருக்கிறது.

ஐக்கிய அரபு அமீரக அரசு இந்தியாவுக்கு கிரையோஜெனிக் ஆக்சிஜன் டேங்கர்களை அனுப்பி வைத்திருக்கிறது. இந்தியாவுக்கு உதவுவதில் உறுதியாக இருப்பதாக அந்நாட்டில் வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயத் தெரிவித்து உள்ளார். ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு 10 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை அடுத்த 7 நாள்களில் வழங்கப் போவதாக சீன தூதரகம் கூறியுள்ளது.

இதற்கிடையில் இந்தியாவுக்கு உதவ தயார் என்றும் ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்யா வெளியிட்ட அறிக்கையில், 4,00,000 வரையிலான ரெம்டெசிவிர் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் இந்தியாவுக்கு இன்னும் 15 நாட்களில் வர உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.