தடுப்பூசி ஒரு டோஸ் போட்டாலே கொரோனா பரவல் பாதியளவு குறைகிறது – ஆய்வு தகவல்

Read Time:3 Minute, 26 Second

தடுப்பூசி ஒரு டோஸ் போட்டாலே கொரோனா பரவல் பாதியளவு குறைகிறது என இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக உலக நாடுகளில் உலுக்கிக் கொண்டிருக்கிறது.

உலக அளவில் இந்த கொடிய வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் முன்வரிசையில் உள்ளன. இந்நாடுகளில் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் உள்ளது.

அதே சமயம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் உலக நாடுகள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளில் அதிக கவனம் செலுத்தி திட்டமிட்டதை விட மிக வேகமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் தடுப்பூசி ஒரு டோஸ் போட்டாலே கொரோனா பரவல் பாதியளவு குறைகிறது என இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போடுவதற்கும், இத்தொற்று பரவலுக்கும் உள்ள தொடர்பு குறித்த புதிய பொது சுகாதார ஆய்வு இங்கிலாந்தில் நடத்தப்பட்டு உள்ளது.

ஆய்வு முடிவில் தடுப்பூசி போடாதவர்களுடன் ஒப்பிடும்போது ஒரு ‘டோஸ்’ தடுப்பூசி போட்டவர்களின் மூலம் கொரோனா பரவல் அபாயம் 38 முதல் 49 சதவீதம் குறைகிறது. ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ராஜெனகா, பிசர்-பயோன்டெக் ஆகிய எந்த தடுப்பூசியின் முதல் ‘டோஸ்’ போட்டவர்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தடுப்பூசி போட்ட 14 நாட்களுக்கு பிறகு கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு கிடைக்கிறது என்றும் அதில் வயது வித்தியாசமில்லை என்பதும் தெரியவந்திருக்கின்றன என்றும் கூறப்படுள்ளது.

தடுப்பூசி ஒரு டோஸ் போட்டாலே வீடுகளில் 50 சதவீதம் தொற்று பரவல் குறைவது ஆய்வில் உறுதியாகி இருக்கிறது. தடுப்பூசி தான் நம்மையும், நம்மை சுற்றி உள்ளவர்களையும் காக்கிறது என்பதற்கு இது சான்றாகிறது. எனவே, தேசிய சுகாதார சேவையால் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கப்படும் போது மக்கள் உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்து இருகிறார்.

மேலும் தற்போதைய கண்டுபிடிப்பு, ஊக்கமளிப்பதாக இருந்தாலும், தொற்றை தவிர்க்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளான சுகாதாரத்தை பேணுதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்றவற்றை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.