இந்தியாவில் இரட்டை உருமாறிய வைரஸ் ஆதிக்கம் எங்கே…? தமிழகத்தில் பாதிப்பு?

Read Time:3 Minute, 19 Second

இந்தியாவில் இரட்டை உருமாறிய வைரஸ் ஆதிக்கம் செலுத்துவது எங்கே என்பது குறித்த தகவல்களை தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மத்தியில் உருமாறிய வைரசும் வேலையை காட்டுகிறது. இதனால் தான் ஒவ்வொரு நாளும் பாதிப்பு அதிகரித்துச் செல்கிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் பார்வையாக இருக்கிறது.

இந்நிலையில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் சுஜித் சிங் பேசுகையில், இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது வட இந்தியாவின் பஞ்சாப்பில் 482 பேரும், டெல்லியில் 516 பேரும், தெலுங்கானாவில் 192 பேரும், மராட்டியத்தில் 83 பேரும், கர்நாடகத்தில் 82 பேரும் என அந்த பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துகிறது என தெரிவித்து உள்ளார்.

மாநிலங்களுடன் காணொலி காட்சி வழியாக ஆலோசனை நடத்திய போது மத்திய சுகாதார அமைச்சகமும் தற்போதைய உருமாறிய வைரஸ் பற்றிய கவலையை பகிர்ந்து கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்..

பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியது.

இரட்டை உருமாறிய வைரஸ்

இரட்டை உருமாறிய வைரஸ் ( பி.1.617) மராட்டியத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது என தெரிவித்து உள்ளார்.

இங்கு 761 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர் எனக் கூறியுள்ளார். இது போக மேற்கு வங்காளத்தில் 124 பேரும், டெல்லியில் 104 பேரும், குஜராத்தில் 102 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் தென்ஆப்பிரிக்க வைரஸ் (பி.1.315) தெலுங்கானாவிலும், டெல்லியிலும் காணப்படுகிறது.

பிரேசில் வைரஸ் (பி1) மராட்டியத்தில் மிகக்குறைந்த விகிதத்தில் காணப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

சுகாதார அமைச்சகமும், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையமும் அடிக்கடி தகவல் தொடர்பின் மூலம் உருமாறிய வைரஸ் பற்றிய தகவல்களை அனைத்து மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் பகிர்ந்தன.

கவலையை ஏற்படுத்துகிற புதிய உருமாறிய வைரஸ் பாதிப்பு உள்ள மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு வேண்டும், பொது சுகாதார நடவடிக்கைகளை கடுமையாக்க வேண்டும் என்று மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் அறிவுறுத்துகிறோம் என தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் சுஜித் சிங் கூறியுள்ளார்.

இதன் மூலம் தமிழகத்தில் இங்கிலாந்து வைரஸ், இரட்டை உருமாறிய வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.