காட்டு யானைகளை அடித்து துன்புறுத்திய மலைவாழ் இளைஞர்கள் கைது

Read Time:2 Minute, 39 Second

உடுமலை வனப்பகுதியில் காட்டு யானைகளை மலைவாழ் இளைஞர்கள் கற்களால் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திருப்பூர் மாவட்டம் உடுமலை வனப்பகுதியில் பல மலைவாழ் கிராமங்கள் உள்ளன.

அங்கு வசித்து வரும் மலைவாழ் இளைஞர்கள் சிலர் மாடு மேய்த்துக்கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு தண்ணீர் தேடி வந்த காட்டு யானைகளை குச்சிகளைக் கொண்டு அடித்தும், கல்வீசி தாக்கியும் துன்புறுத்தி உள்ளனர். அமைதியாக செல்லும் யானைகளை அவர்கள் சித்திரவதை செய்யும் காட்சிகளை சிலர் மரத்தில் இருந்து எடுத்துள்ளனர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்த வீடியோ பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை பார்த்த பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். யாருக்கும் தொந்தரவு செய்யாது தண்ணீர் தேடி வந்த யானைகளை கொடூரமாக தாக்கும் மனிதாபிமானம் இல்லாத மனிதர்களை நினைத்து வேதனைப்பட்டனர்.

இந்த வீடியோ வெளியானதாலே யானைகள் துன்புறுத்துவது வெளியே தெரியவந்துள்ளது.

இல்லையென்றால் இதுபோன்ற சம்பவம் வெளியில் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை என்ற அவலமே நிலவுகிறது. தாக்குதலில் யானைகள் காயமடைந்து இருந்தால், அது மேலும் சிதலமாகி அதற்கு மரணமே ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் தாக்குதல் நடந்த வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்று யானைகள் ஏதேனும் காயம் அடைந்துள்ளதா? என்று கண்டறிய வேண்டும் என்றும், அவ்வாறு இருந்தால் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனிடையே யானைகளை துன்புறுத்திய திருமூர்த்திமலை மலைவாழ் பகுதியை சேர்ந்த செல்வம், காளிமுத்து, அருண்குமார் ஆகிய 3 பேரை மீது உடுமலை வனத்துறையினர் வழக்குப்பதிவு கைது செய்துள்ளனர்.