உலக அரங்கில் இந்தியா முன்னெடுத்த திட்டம்… தடுப்பூசி வினியோகம் அதிகரிக்க வாய்ப்பு.!

Read Time:4 Minute, 36 Second

கொரோனா தடுப்பூசி காப்புரிமை விலக்கத்துக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

உலகம் கொரோனா தொற்றின் கோரப்பிடியில் சிக்கியுள்ள தருணத்தில் உலகமெங்கும் தடுப்பூசி வினியோகம் அதிகரிக்க வேண்டும் என்றால் தடுப்பூசிக்கான காப்புரிமை தொடர்பான விதிகளை, உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துரிமை விதிகளில் இருந்து விலக்க வேண்டும் என்று இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் குரல் கொடுத்தன.

இந்த திட்டத்துக்கு ஆதரவாக சுமார் 60-க்கும் மேற்பட்ட நாடுகள் குரல் கொடுத்து வந்தன.

ஆனாலும் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் கடந்த 6 மாத காலமாக உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துரிமை விதிகளில் இருந்து விலக்க வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டன.

இந்நிலையில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தர வேண்டும் அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகத்தை ஜனநாயக கட்சியைசேர்ந்த 100 எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

அமெரிக்காவும் ஆதரவு வழங்கியது

இந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் உலக வர்த்தக அமைப்பின் பொதுச்சபை கூட்டத்தில், அப்போது அறிவுசார் சொத்து விதிகளில் இருந்து, தடுப்பூசிக்கான காப்புரிமையை விலக்கி வைக்கவேண்டும் என்ற இந்தியா உள்ளிட்ட நாடுகளின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்தது.

இருப்பினும் இதை மருந்து உற்பத்தியாளர்கள் எதிர்க்கின்றனர். இது நாம் விரும்பும் விளைவை கொண்டிருக்காது என்பது அவர்களது வாதம். ஆனால் அசாதாரணமான காலங்கள், இப்படிப்பட்ட அசாதாரணமான நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கின்றன என்று அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதி கேதரின் டாய் தெரிவித்தார்.

உலக வர்த்தக அமைப்பின் 100-க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகள், தடுப்பூசி மீதான காப்புரிமை விலக்கத்துக்கு ஆதரவாக உள்ளன.

உற்பத்தி, வினியோகம் அதிகரிக்க வாய்ப்பு

இதில் விவாதித்து முடிவு எடுப்பதற்காக உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துகள் குழுவுக்கே உள்ளது. இந்த அமைப்பின் கூட்டம் அடுத்த மாதம் கூடும் என தகவல்கள் கூறுகின்றன.

இந்த விவகாரத்தில் ஜோ பைடன் நிர்வாகம் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்துள்ளது.

ஆனால் முந்தைய டிரம்ப் நிர்வாகம் மாறுபட்ட முடிவு எடுத்திருந்தது. இங்கிலாந்தும், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளும் கூட இந்தியாவின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

அமெரிக்காவின் தற்போதைய நிலைப்பாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் என்றென்றும் நினைவுகூரத்தக்க தருணம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இதை உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துகள் குழு ஏற்று, காப்புரிமை விதிகளுக்கு விலக்கு அளித்து ஒப்புதல் வழங்கினால் அது தடுப்பூசி உற்பத்தியையும், வினியோகத்தையும் அதிகரிக்க வாய்ப்பு அதிகரிக்கும். அது மட்டுமின்றி பொருளாதாரத்தில் நலிவுற்ற நாடுகளுக்கு இன்னும் மலிவான விலையில் தடுப்பூசி கிடைக்க வழிவகுக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

காப்புரிமையை விலக்கும் போது கொரோனா தடுப்பூசி தயாரிப்புக்கான பார்முலாவை பெற்று பிற நாடுகளும் தடுப்பூசியை தயாரிக்க முடியும்.