கொரோனா தொற்று நோயாளிகளுக்கு பவுடர் வடிவில் மருந்து, இந்தியாவில் ஒப்புதல்

Read Time:3 Minute, 10 Second

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கண்டுபிடிக்கப்பட்ட புதிய மருந்துக்கு இந்தியாவில் அவசர பயன்பாட்டு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில், ஆக்சிஜன் தேவையும், ரெம்டெசிவிர் போன்ற உயிர்காக்கும் மருந்துகளுக்கான தேவையும் பெருகி வருகிறது.

ஆங்காங்கே ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. இதனை தடுக்கும் வகையில் கொரோனா நோயாளிகளுக்கான புதிய வாய்வழி மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

டி.ஆர்.டி.ஓ. என்னும் பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி அமைப்பின் ஆய்வுக்கூடமான அணு மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனம் (ஐ.என்.எம்.ஏ.எஸ்.), ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த மருந்தை கண்டுபிடித்து உள்ளது.

‘2-டிஜி’என அழைக்கப்படும் இந்த மருந்துக்கு அவசர பயன்பாட்டு ஒப்புதலை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் 1-ம் தேதியன்று வழங்கியுள்ளது.

இதையொட்டி டி.ஆர்.டி.ஓ. வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மருந்து குளுக்கோஸின் பொதுவான மூலக்கூறு மற்றும் ஒத்த அமைப்புச் செயலி என்பதால் எளிதில் உற்பத்தி செய்து, நாட்டில் ஏராளமாக கிடைக்க செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மருந்து சிறிய அளவிலான பாக்கெட்டில் வருகிறது.

பவுடராக இருக்கும் இந்து மருந்தை தண்ணீரில் கரைத்து வாய் வழியாக எடுத்துக்கொண்டு விடவேண்டும்.

இது கொரோனா வைரஸ் தொற்று பாதித்த செல்களில் குவிந்து, வைரஸ் தொகுப்பு மற்றும் ஆற்றல் உற்பத்தியை நிறுத்துவதின் மூலம் வைரஸ் வளர்ச்சிக்கு தடை போடும்.

  • இந்த மருந்து கொடுத்த நோயாளிகளுக்கு ஆக்சிஜனை சார்ந்து இருப்பது குறைந்து இருப்பது தெரிய வந்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்ல பலன் அளிக்கும்

இந்த மருந்தின் மருத்துவ பரிசோதனை தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடந்துள்ளது.

இது 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் நல்ல பலன் தருவது தெரியவந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிதமானது முதல் தீவிரமான கொரோனா வைரஸ் பாதிப்பில் சிக்கியவர்களுக்கு இது நல்ல பலன்தரும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.