இதுவரையில் 1,952 ரெயில்வே ஊழியர்கள் கொரோனாவுக்கு உயிரிழப்பு

Read Time:2 Minute, 51 Second

இந்தியாவில் இதுவரை 1,952 ரெயில்வே ஊழியர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தினமும் சுமார் 1000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருவதாகவும் ரெயில்வே கூறியுள்ளது.

இந்திய ரெயில்வேயில் சுமார் 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்களில் பலரும் தொற்றுக்கு ஆளாகி வருவதாக ரெயில்வே வாரியம் தெரிவித்து உள்ளது.

ரெயில்வே வாரிய தலைவர் சுனீத் சர்மா கூறுகையில், கொரோனாவை பொறுத்தவரை நாட்டின் பிற மாநிலங்கள் அல்லது பிராந்தியங்களில் இருந்து ரெயில்வேயும் வேறுபட்டது அல்ல. நாங்களும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகிறோம். போக்குவரத்து சேவையை செய்து வரும் நாங்கள் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை நடத்தியாக வேண்டும். இத்தகைய பணிகளின் போது நாள்தோறும் சுமார் 1,000 ஊழியர்கள் தொற்றுக்கு ஆளாகிறார்கள் எனக் கூறினார்.

மேலும், எங்களுக்காக தனி மருத்துவமனைகள் உள்ளன. அவற்றில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்து உள்ளோம். ரெயில்வே மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளை ஏற்படுத்தி இருக்கிறோம். எங்கள் ஊழியர்களை நாங்களே பார்த்துக்கொள்கிறோம். தற்போதைய நிலையில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்றுகளால் 4 ஆயிரம் படுக்கைகள் நிரம்பி உள்ளன. அவர்களை விரைவில் குணப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும் கூறினார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து மே 9-ம் தேதி வரையில் 1,952 ஊழியர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து ரெயில்வே கவலை கொண்டுள்ளது எனக் கூறிய சுனீத் சர்மா , இந்த அச்சுறுத்தலை குறைக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார். முன்னதாக கொரோனாவில் உயிரிழக்கும் ரெயில்வே ஊழியர்களுக்கும் முன்கள பணியாளர்களுக்கு இணையான இழப்பீடு வழங்குமாறு ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலுக்கு அனைத்திந்திய ரெயில்வே ஊழியர் கூட்டமைப்பு கடிதம் எழுதியிருந்தது.