கொரோனா: இந்தியாவுக்கு ரூ.3 ஆயிரத்து 750 கோடி அமெரிக்கா நிதி உதவி..

Read Time:2 Minute, 20 Second

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில், கடந்த மாத இறுதியில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

இந்தியாவுக்கு அமெரிக்கா உதவுவதாகவும் கொரோனாவை இரு நாடுகளும் ஒன்றாக எதிர்ப்போம் என்றும் உறுதி கூறினாா். அதைத்தொடர்ந்து, அமெரிக்காவில் இருந்து நிதிஉதவியும், மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

50 கோடி டாலர்

அமெரிக்க அரசு மட்டுமின்றி, அமெரிக்க நிறுவனங்கள், அமெரிக்க இந்தியர்கள் என பலதரப்பினரும் போட்டிபோட்டு உதவி வருகிறார்கள். இப்படி அமெரிக்காவில் பலதரப்பினரிடம் இருந்து வந்த நிதிஉதவி 50 கோடி டாலரை தொட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 3 ஆயிரத்து 750 கோடி ஆகும். இதில் அமெரிக்க அரசு உறுதி அளித்த 10 கோடி டாலரும் அடங்கும்.

அமெரிக்க மருந்து நிறுவனமான ‘பைசர்’ 7 கோடி டாலர் அளித்துள்ளது. மேலும் போயிங், மாஸ்டர்கார்டு நிறுவனங்கள் தலா 1 கோடி டாலரும், கூகுள் நிறுவனம் 1 கோடியே 80 லட்சம் டாலரும் வழங்கி உள்ளன.

அமெரிக்க முன்னணி நிறுவனங்கள் அடங்கிய குளோபல் டாஸ்க் போர்ஸ் 3 கோடி டாலர் வழங்குவதாக தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள் நேற்று முன்தினம் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடத்தினர். அதில் சில மணி நேரங்களில் 15 லட்சம் டாலர் சேர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித்சிங் நன்றி தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று சிகிச்சை பணிகளுக்காக இந்தியாவுக்கு அமெரிக்காவில் இருந்து வந்த நிதி உதவி ரூ.4 ஆயிரம் கோடியை நெருங்கியது குறிப்பிடத்தக்கது.