புதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா..? சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை வளைக்கும் பா.ஜனதா

Read Time:3 Minute, 54 Second

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஆட்சியை பிடிக்கும் முயற்சியாக சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை வளைக்கும் முயற்சியில் பா.ஜனதா இறங்கியுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

என்.ஆர்.காங்.-பா.ஜ.க. கூட்டணி

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைத்து உள்ளது. முதல்-அமைச்சராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த 7-ந்தேதி பதவியேற்றுக்கொண்டார்.

இதனிடையே துணை முதல்-அமைச்சர், மேலும் 2 அமைச்சர் பதவிகளை தங்களுக்கு தரவேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இலாகாக்களையும் கேட்டு என்.ஆர்.காங்கிரஸ் தலைமைக்கு பா.ஜனதா குடைச்சல் கொடுத்து வருகிறது. ஆனால் இதற்கு ரங்கசாமி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மாற்றி எழுதிய வரலாறு

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் ரங்கசாமி அனுமதிக்கப்பட்டுள்ள, இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு பா.ஜனதாவை சேர்ந்த வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.

மாநில அரசின் பரிந்துரையின் பேரில் தான் மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிப்பது வழக்கம். ஆனால் கடந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து மத்திய பா.ஜனதா அரசு வரலாறை மாற்றி எழுதியது.

தற்போது கூட்டணி கட்சியின் முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவியில் இருக்கும் போது அவருடன் கலந்து ஆலோசிக்காமல், நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து பா.ஜனதா அதிரடி காட்டியது தான் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கு வலை

3 எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டு இருப்பதன் மூலம் சட்டசபையில் பா.ஜ.க.வின் பலம் 9 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர ஏனாமில் ரங்கசாமியை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற கொல்லப்பல்லி ஸ்ரீனிவாஸ் அசோக் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.

இவர் தவிர மற்ற 5 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களையும் வளைத்துப் போட பா.ஜ.க. காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையையும் தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் ரங்கசாமி சிகிச்சை பெற்று வரும் நிலையில் எம்.எல்.ஏ.க்கள் நியமனம், சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை வளைக்கும் முயற்சி என அடுத்தடுத்து நகர்வுகளை பா.ஜ.க. விரைவுபடுத்தியுள்ளது.

நாட்டின் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா இதுபோன்ற வியூகத்தைத்தான் கடைபிடித்து வருகிறது. புதுச்சேரியிலும் இந்த சித்து விளையாட்டை பா.ஜனதா எந்த நேரத்திலும் அரங்கேற்றும் என்பது தான் இப்போதுள்ள நிலைமை.