கங்கையில் மிதக்கும் உடல்களால் கொரோனா பரவுமா….?

Read Time:5 Minute, 18 Second

பீகார் மாநிலத்தின் பக்ஸர் மாவட்டத்தில், சவுஸாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கங்கைக்கரையில் டஜன் கணக்கிலான மனித உடல்கள் மிதந்து வந்தது கண்டு உள்ளூர் மக்கள் பதறிப்போனார்கள்.

இந்த உடல்களில் பலவும் அங்குள்ள விலங்குகளுக்கு இரையானது மிகவும் கொடுமையான நிகழ்வாகும். இந்த உடல்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்துதான் மிதந்து வந்திருக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தகன மையங்கள் எல்லாம் உடல்களால் நிரம்பி வழிவதால், தங்களுக்கு அன்பானவர்கள் இறக்கிற போது உறவினர்கள் கங்கையில் மூழ்கடிக்க தொடங்கி இருக்கிறார்கள். உடல்களை எரிப்பதற்குத்தேவையான விறகு கட்டைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது” என உள்ளூர் மக்கள் தெரிவித்து உள்ளனர்.

பக்ஸர் மாவட்ட துணை ஆட்சியர் உபாத்யாய், இங்கே கங்கையில் மிதந்து வந்துள்ள உடல்கள் உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச், வாரணாசி, அலகாபாத் ஆகிய நகரங்களில் எங்கிருந்து வந்தன என்பது குறித்து விசாரிக்க வேண்டியது இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அவர்களது குடும்ப உறுப்பினர்களே கங்கை ஆற்றில் போட்டுச்செல்கிறார்கள் என கிராமவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இறந்தவர்களின் உடல்கள் ஆற்றின் நடுப்பகுதியில் மூழ்கடிக்கப்பட்டு, ஆற்றில் நீரோட்டம் குறைவாக இருப்பதால் அந்த உடல்கள் ஆற்றின் போக்கில் ஓடாமல் கரைகளுக்கு வந்துவிடுவதாகவும் சொல்லப்படுகிறது. பீகாரில் கங்கையில் மிதந்து வந்த 71 உடல்கள், உத்தரபிரதேசத்தில் இருந்து வந்துள்ளதாக பீகார் மாநில நீர்வளத்துறை அமைச்சர் சஞ்சய் குமார் கூறி இருக்கிறார்.

உ.பி.யிலும் தொடரும் அவலம்

உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூரிலும் இதுபோன்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அங்கு கங்கை நதிக்கரையில் டஜன்கணக்கில் மனித உடல்கள் மிதந்து வந்து அதுபற்றிய காட்சிகளும், தகவல்களும் வெளியாகி மக்களைப் பதற வைக்கிறது. அந்த உடல்கள் அனைத்தும் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் என்ற தகவல் மேலும் பதற்றத்தை எகிற வைக்கின்றன. இது கங்கை நதியின் புனிதத்தை மட்டுமல்ல சுற்றுச்சூழலையும் பாதித்து மனித குலத்துக்கே வேட்டு வைக்கிற விபரீதம் என பலதரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹமிர்பூர் மாவட்டத்தில் 5 மனித உடல்கள், யமுனை நதிக்கரையில் மிதந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இறக்கிறவர்களின் உடல்கள் முறைப்படி தகனம் செய்யப்படுகின்றனவா, அடக்கம் செய்யப்படுகின்றனவா என்பதை உள்ளூர் நிர்வாகங்கள் கண்காணிக்க வேண்டும் என மாநில அரசுக்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவி விடுமோ…?

கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், இவை கொரோனாவால் பலியானோரின் உடல்களாக இருக்குமோ என்ற சந்தேகம் நிலவி வருகிறது. அப்படி இருந்தால், அவற்றின் மூலமாக கொரோனா பரவி விடுமோ என்ற அச்சமும் வெகுவாக எழுந்து உள்ளது. ஆனால் இதுகுறித்து விளக்கம் அளிக்கும் நிபுணர்கள் வாய்ப்பு இல்லை எனக் கூறியுள்ளனர்.

கான்பூர் ஐ.ஐ.டி.யின் சுற்றுச்சூழல் என்ஜினீயரிங் பேராசிரியரும், மத்திய அரசின் கங்கை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் தொடர்புடையவருமான சதீஷ் டாரே பேசுகையில், கங்கையில் உடல்களை போடுவது புதிதல்ல. ஆனால், கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் இத்தகைய நிகழ்வுகள் குறைந்து உள்ளன. தற்போது கொரோனா காலத்தில் கங்கை ஆற்றில் உடல்களை போடுவது தீவிரமான பிரச்சினையாக தான் உள்ளது.

கங்கையும், யமுனையும் எண்ணற்ற கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. நீர்நிலையில் உடல்களை போடுவதன் மூலம் நீர்நிலை மாசு அடையும். ஆனால், தண்ணீர் மூலம் கொரோனா பரவ வாய்ப்பில்லை. ஒருவேளை அவை கொரோனா நோயாளிகளின் உடல்களாக இருந்தாலும், நீரோட்டத்தில் அடித்து வரப்படும்போது கிருமிகள் நீர்த்துப் போய்விடும். குறிப்பிடத்தக்க அளவுக்கு பாதிப்பு இருக்காது. எனவே, இதுபற்றி கவலைப்பட வேண்டாம் எனக் கூறியுள்ளார்.