காசாமுனையில் பதற்றம்… இஸ்ரேலில் நடப்பது என்ன…?

Read Time:5 Minute, 20 Second

கிழக்கு ஜெருசலேம், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மோதலின் முக்கிய மையமாக இருக்கிறது

இப்பகுதியை இரு தரப்பினரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். 1967-ம் ஆண்டு நடந்த போருக்குப் பின்னர் இந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரேல் ஆக்கிரமித்தது. 1980-ம் ஆண்டு இஸ்ரேல் அரசு அதை தங்களோடு இணைத்தும் கொண்டது.

அங்கு ஷைக் ஜாரா மாவட்டத்தில் உள்ள பாலஸ்தீனியர்கள், யூத குடியேறிகளால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இது பாலஸ்தீனிய மக்களை கோபத்துக்கு ஆளாக்கி உள்ளது.

இது தொடர்பாக அங்கே கோர்ட்டில் ஒரு வழக்கும் விசாரணையில் உள்ளது. இதனால் தான் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேல் போலீஸ் படையினருக்கும் இடையே கடந்த பல நாட்களாக மோதல்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று (மே 7) ஜெருசலேம் நகரில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த பயங்கர மோதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் காயம் அடைந்தனர்.

இதனையடுத்து பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசா பகுதியை கட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் பதிலடி தாக்குதலை தொடங்கினர்.

ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் வீச்சு

இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் ஏவுகணைகளை வீசினர்.

இந்த ராக்கெட் வீச்சுக்கு பதிலடி கொடுப்போம் என எச்சரித்த இஸ்ரேலும் பதிலடி கொடுக்க தொடங்கியது. காசா முனைப்பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் கடுமையான வான்தாக்குதல் நடத்தியது. கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிற சண்டைகளில் இது மிகுந்த ரத்தக்களறியை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலில் 65 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடுள்ளன. கொல்லப்பட்டவர்களில் ஹமாஸ் அமைப்பின் தளபதி ஒருவரும் அடங்குவார் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ள வேளையில், இந்தத் தாக்குதலானது உலக அரங்கை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இஸ்ரேலும், பாலஸ்தீனியர்களும் அமைதி காக்க வேண்டும், முடிந்த அளவுக்கு விரைவாக பதற்றத்தைத் தணித்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு, இங்கிலாந்து ஆகியவை கேட்டுக்கொண்டுள்ளன.

கடும் மோதல் தொடர்கிறது

காசா பகுதியில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது. காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் அங்கு உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் தீ பற்றி எரிந்தது. அங்கு வானுயரத்துக்கு கரும்புகை மண்டலம் சூழ்ந்திருந்தது.

காசாவில் இயங்கிவரும் ஹமாஸ் போராளிகளின் தலைமை அலுவலகத்தை இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுவீசி தகர்த்தன. ஆனால், முன்னதாகவே கட்டிடத்திலிருந்து அனைவரும் வெளியேறிவிட்டதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

90 சதவீத ராக்கெட்டுகள் இடைமறித்து அழிப்பு

அதே சமயம் தங்களின் தலைமை அலுவலகம் தகர்க்கப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது 130 ராக்கெட்டுகளை வீசியதாக ஹமாஸ் போராளிகள் தெரிவித்தனர் ஆனால் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசியதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் ராணுவம், எனினும் 90 சதவீத ராக்கெட்டுகளை நடுவானிலேயே இடைமறித்து அழித்து விட்டதாக தெரிவித்து உள்ளது.

எஞ்சிய ராக்கெட்டுகள் தலைநகர் டெல் அவிவ் மற்றும் அதன் அண்டை நகரங்களை தாக்கியதாகவும், உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினருக்கு பதிலடி கொடுக்கும் நிலையில், இந்த தாக்குதல்கள் வெறும் தொடக்கம்தான் என இஸ்ரேலிய ராணுவ மந்திரி பென்னி கான்ட்ஸ் எச்சரித்துள்ளார்.

அதே போல் இஸ்ரேல் பதற்றத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என விரும்பினால் அதற்கு தாங்களும் தயார் என்று ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹானியே தெரிவித்து உள்ளார்.