உருமாறிய இந்திய கொரோனா மிகவும் ஆபத்தானது… 44 நாடுகளில் பரவியது…!

Read Time:3 Minute, 7 Second

44 நாடுகளில் இந்தியாவின் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது கவலை தரும் அம்சம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது.

கொரோனா வைரஸ் தோற்றம் முதல் அதில் ஏற்பட்டு வருகிற திரிபு மாற்றங்களை உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டு வருகிறது.

குறிப்பாக உருமாறிய வைரஸ்கள் பரவுதல் மற்றும் தீவிரத்தன்மையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றனவா, தேசிய சுகாதார அதிகாரிகள் பொது சுகாதார, சமூக நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் மாற்றங்களுக்கு வழி வகுக்கின்றனவா என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி கடந்த 11-ம் தேதி நிலவரப்படி, 4,500-க்கும் மேற்பட்ட கொரோனா மரபணுக்கள் உலக சுகாதார அமைப்பால் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. இதற்கிடையே இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உருமாறிய கொரோனா பரவல் கண்டுபிடிக்கப்பட்டது.

44 நாடுகளில் இந்திய கொரோனா

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸை ‘பி.1.617’ என உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியுள்ளது.

6 பிராந்தியங்களில் உள்ள 44 நாடுகளில் இந்த வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது. இதை கவலை தரும் அம்சமாக பார்ப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வைரசை கவலைக்குரிய மாறுபாடு என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியும் இருக்கிறது.

இத்தகைய வைரஸ்கள் சீனாவில் தோன்றிய அசல் கொரோனா வைரசைவிடவும் அதிக ஆபத்தானவை என்றும் அதிக அளவில் பரவும், தடுப்பூசிகளுக்கு அவை கட்டுப்படாது என்றும் கருதப்படுகிறது.

நோய் எதிர்ப்பு பொருளின் செயல் திறன்

மேலும் இந்த வைரஸ் பற்றி உலக சுகாதார அமைப்பு கூறுகையில், பாதிப்பு ஏற்படுத்துகிற பிற வைரஸ் வகைகளுடன் ஒப்பிடுகையில் பி.1.617 வைரஸ் கவலைக்குரிய மாறுபாடு என்று தற்போதைய ஆதாரங்களின் அடிப்படையில் வகைப்படுத்தி இருக்கிறோம்.

இதற்கான ஆரம்ப சான்றுகள், கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிற பாம்லானிவிமாபின் என்னும் மோனோகுளோனல் ஆன்டிபாடியின் (நோய் எதிர்ப்பு பொருள்) செயல்திறனை இந்த வைரஸ் குறைக்கிறது என்றும், ஆன்டிபாடிகளை கொல்கிற தன்மையை லேசாக கொண்டிருக்கிறது என்றும் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.