கொரோனா பாதித்தவர்களில் 52 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலி

Read Time:3 Minute, 4 Second

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பாதித்தவர்களில் 52 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் “மியூக்கோர்மைகோசிஸ்” என்ற கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆளாகி வருகின்றன என தெரியவந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் அதிகப்படியான ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொண்டதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அவர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்குவதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க: கொரோனா நோயாளிகளுக்கு பரவும் கருப்பு பூஞ்சை நோய்…!


இந்த நோய் பாதிப்பு அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது. தலைவலி, காய்ச்சல், சைனஸ் மண்டலத்தில் பாதிப்பு, கண்களுக்கு கீழ் வலி மற்றும் பகுதியளவில் பார்வை குறைபாடு ஏற்படுவது போன்றவை இந்த பூஞ்சை பாதிப்புக்கு முக்கிய அறிகுறியாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

52 பேர் பலி

இந்தநிலையில் நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிராவில் இதுவரை 52 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலியாகி உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். கருப்பு பூஞ்சை நோய்க்கு உயிரிழந்தவர்கள் அனைவரும் அதற்கு முன்னதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும், கொரோனா தொடங்கிய கடந்த ஆண்டு முதல் இதுவரை மேற்கண்டவர்கள் பலியாகி உள்ளனர் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

இருப்பினும் கடந்த ஆண்டில் சிலர் மட்டுமே பலியான நிலையில், இந்த ஆண்டில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மராட்டியத்தில் குறைந்தது 8 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒரு கண் பார்வையை இழந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதும் தெரியவந்திருக்கிறது.

1,500 பேர் பாதிப்பு

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே பேசுகையில், ‘‘மாநிலம் முழுவதும் சுமார் 1,500 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 1 லட்சம் அம்போட்டெரிசின் – பி பூஞ்சை எதிர்ப்பு மருந்து வாங்க டெண்டர் கோரப்படும் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.