இந்தியாவை கடிந்து கொண்ட சிங்கப்பூர்… கெஜ்ரிவால் ‘டுவிட்’ செய்தது என்ன…?

Read Time:5 Minute, 3 Second

இந்தியா கொரோனா 2-வது அலையில் சிக்கி தவிக்கும் நிலையில் சிங்கப்பூர் ஆக்சிஜன் சிலிண்டர்கள், செறிவூட்டிகள் மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆக்சிஜன் என தேவையான உதவிகளை செய்து வருகிறது.

இந்நிலையில் சிங்கப்பூரில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் காணப்படுவதாக தகவல்கள் வெளியானது. இது இந்தியாவில் உருமாறிய B.1.617 ரக கொரோனாவாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து ஆய்வினை தொடங்கிய சிங்கப்பூர் அரசு, பள்ளிகளை மூடவும் உத்தரவிட்டது.

அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்

இந்நிலையில் குழந்தைகளை தாக்கும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் சிங்கப்பூரில் தோன்றி இருப்பதால், சிங்கப்பூர் உடனான அனைத்து விமான சேவைகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசை வலியுறுத்தினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட் செய்தியில், சிங்கப்பூரில் தோன்றி உள்ள ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானதாக கூறப்படுகிறது. அந்த கொரோனா வைரசால் 3-வது அலை வடிவில் டெல்லியை அடையக்கூடும். இந்த நிலையில் மத்திய அரசு, சிங்கப்பூர் உடனான அனைத்து விமான சேவைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் குழந்தைகளுக்கான தடுப்பூசியை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டார்.

சிங்கப்பூர் அரசு கொந்தளிப்பு

அரவிந்த் கெஜ்ரிவால் சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவியதாக வெளியிட்ட தகவல் சிங்கப்பூர் அரசை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டர் செய்தியை பகிர்ந்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவின் பாலகிருஷ்ணன் பதிலளித்து உள்ளார். அதில் அரசியல்வாதிகள் உண்மையான கருத்துகளுக்கு மட்டுமே துணையாக இருக்க வேண்டும் என்றும் இது போன்ற வதந்திகளை பரப்பக்கூடாது என்றும் குறிப்பிட்டார். மேலும் தற்போது பரவி வரும் உருமாறிய பி.1.617.2 வைரஸ் எவ்வாறு சிங்கப்பூரில் பரவியது என்பது குறித்த பதிவை வெளியிட்டார். அதில், பி.1.617.2 வைரஸானது இந்தியாவில் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இந்திய தூதரை அழைத்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது. அப்போது இந்திய தூதர், டெல்லி முதல்வர் கொரோனா வைரஸ் உருமாற்றம் மற்றும் விமானப் போக்குவரத்து குறித்து பேச தகுதியற்றவர் என கூறியிருக்கிறார் என இந்திய வெளியுறவுத்துறை கூறியிருக்கிறது.

இந்த உருமாறிய கொரோனா வைரஸானது இந்தியாவில் இருந்தே எங்கள் நாட்டினருக்கு பரவியுள்ளது என்று காரமான விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளது சிங்கப்பூர் அரசு.

மத்திய அரசு விளக்கம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்தை மத்திய அரசும் கண்டித்துள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியாவும், சிங்கப்பூரும் கூட்டாக இணைந்து செயல்பட்டு வருகின்றன என்றும் இந்தியாவுக்கு நெருக்கடியான காலத்தில் விரைந்து ஆக்சிஜன் வழங்கிய சிங்கப்பூர் அரசின் செயல்கள் பாராட்டுக்குரியவை என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் அவர்களின் ராணுவ விமானத்தின் மூலம் ஆக்சிஜனை வழங்கி, இரு நாடுகளுக்கும் இடையிலான வலிமையான உறவை வெளிப்படுத்தி உள்ளார்கள் என்றும் பதிவிட்டு இருந்தார்.

நன்கு தெரிந்துகொள்ள வேண்டியவர்களிடமிருந்து பொறுப்பற்ற கருத்துகள் வருவது நீண்டகால நட்புறவை சேதப்படுத்தும் என்றும் இந்தியாவின் பிரதிநிதியாக டெல்லி முதல்வர் பேசக்கூடாது என்றும் ஜெய்சங்கர் கண்டித்துள்ளார்.