ரமணா பட பாணியில் கொரோனாவுக்கு பலியானவரின் பிணத்துக்கு சிகிச்சை…!

Read Time:2 Minute, 40 Second

கொரோனாவுக்கு பலியானவரின் பிணத்தை வைத்து சிகிச்சை அளிப்பதாக கூறி பணம் பறித்த ஆஸ்பத்திரி மருத்துவர்கள், ஊழியர்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அப்போது 50 ஆயிரம் ரூபாய் சிகிச்சை கட்டணமாக முன்பணத்தை குடும்பத்தினர் செலுத்தி உள்ளனர். இந்தநிலையில் நோயாளிக்கு உடல் நலம் மோசமடைந்ததால் 20-ம் தேதி தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு இருக்கிறார். அப்போது மருத்துவமனை நிர்வாகத்தினர் ஊசி மருந்து செலுத்துவதற்காக 35 ஆயிரம் ரூபாய் செலுத்தும்படி நோயாளியின் மனைவியிடம் தெரிவித்து உள்ளனர்..

இந்த பணத்தை அவர் செலுத்திய பின்னர் 3 நாட்கள் கழித்து 24-ம் தேதி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் மீண்டும் கட்டணம் செலுத்த கேட்டு உள்ளது.

இதனால் நோயாளியின் மனைவி சம்பவத்தன்று 40 ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும், மீதி 50 ஆயிரம் ரூபாய் ஆன்லைன் பரிவர்த்தனை மூலமும் மருத்துவமனைக்கு கட்டியுள்ளார். இறுதியாக, பணத்தை பெற்று கொண்ட மருத்துவமனை நிர்வாகத்தினர் நோயாளி உயிரிழந்ததாக தெரிவித்து இருக்கின்றனர். அதனுடன் நோயாளி உயிரிழந்ததற்கான சான்றிதழை வழங்கியுள்ளனர்.

இந்த சான்றிதழில் கடந்த 21-ம் தேதி நோயாளி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டு கொதித்து எழுந்த நோயாளியின் மனைவி, 21-ம் தேதி அன்றே பலியான கணவரின் பிணத்தை வைத்து சிகிச்சை அளிப்பதாக நாடகமாடி பணம் பறித்த மருத்துவமனை நிர்வாகம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தும்படி சிவாஜிநகர் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனாவுக்கு மத்தியில் ரமணா பட பாணியில் நடந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.